மாற்றம் வாழ்வில் முன்னேற்றும் - மைதிலி

பெண்கள் யாரையும் சார்ந்து வாழாமல், பொருளாதார ரீதியாக தனித்து செயல்பட முடியும் என்று நம்புகிறேன். அதை நோக்கியே பயணிக்கிறேன்.

Update: 2022-10-09 01:30 GMT

'விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் இருந்தால் எந்த சூழ்நிலையையும் சமாளித்து சாதிக்கலாம்' என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறார், திருவண்ணாமலை மாவட்டம், ஒண்ணபுரம் கிராமத்தில் வசிக்கும் மைதிலி. சமீபத்தில் சிறந்த 'ஹோமோபிரனர்' என்ற விருது பெற்ற அவருடன் ஒரு சந்திப்பு...

"எனது பெற்றோர் இருவருமே கைத்தறி நெசவாளர்கள். நான் அவர்களுக்கு மூன்றாவது மகள். சிறு வயதில் இருந்தே படிப்பின் மீது இருந்த ஆர்வத்தினால் வகுப்பில் எப்பொழுதும் முதல் மாணவியாக வருவேன். பட்டப்படிப்பு முடிந்ததும் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தேன்.

இதற்கிடையே எனக்கு திருமணம் நடந்து குழந்தை பிறந்தது. பணியின் காரணமாக குழந்தையை எனது பெற்றோரின் அரவணைப்பில் விட்டு விட்டு, நான் பெங்களூருவிற்கு சென்றேன். விடுமுறை நாட்களில் மட்டும் ஊருக்கு வந்து குழந்தையை கவனித்துக்கொண்டேன். பெற்ற குழந்தையை அருகில் இருந்து கவனிக்க முடியாதது எனக்கு பெரும் வருத்தத்தை அளித்தது.

எனவே இரண்டாவதாக கர்ப்பம் தரித்தபோது வேலையில் இருந்து விலகி சொந்த ஊர் திரும்பினேன். இரண்டாவது குழந்தை பிறந்த பின்னர் அருகில் இருந்து கவனித்துக்கொண்டேன். இரண்டு குழந்தைகளும் வளர்ந்து பள்ளிக்கு செல்ல ஆரம்பித்தனர். அந்த நேரத்தில் எனக்கு மீண்டும் பணிக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் வந்தது. ஆனால், குழந்தைகளை பற்றிய கவலையும் இருந்தது.

அப்போதுதான், எனது அம்மா வீட்டில் இருந்தபடியே அப்பாவுடன் சேர்ந்து நெசவு தொழிலில் ஈடுபட்டு, எங்களையும் வளர்த்து ஆளாக்கியதை நினைத்துப் பார்த்தேன். அதுபோல் வீட்டில் இருந்தபடியே ஏதாவது செய்ய வேண்டும் என்று மனதிற்கு தோன்றியது.

அந்த சமயத்தில், கைவசம் இருந்த ரூபாய் 5 ஆயிரத்தை முதலீடாக போட்டு, சேலைகள் வாங்கினேன். அதை எனது குடியிருப்பில் இருந்தவர்களிடம் விற்க ஆரம்பித்தேன். இதுதான் எனது நிறுவனம் தோன்றுவதற்கு அடித்தளமாக இருந்தது".

தொழில் தொடங்கும்போது ஏற்பட்ட நெருக்கடிகள் என்ன? அதை எவ்வாறு எதிர்கொண்டீர்கள்?

நான் தொழில் தொடங்கியபோது ஆன்லைன் பற்றிய எந்த புரிதலும் இல்லாமல் இருந்தது. பொறுமையாக ஒவ்வொன்றையும் கற்றுக்கொண்டேன். முகநூல் புதிதாக வந்த காலகட்டம் அது. எனவே அதன் வழியாக எனது சேலைகளை விற்கலாம் என்ற எண்ணம் தோன்றியது. எனது சொந்த ஊரில் உற்பத்தி செய்யும் ஆரணி சேலைகளை, முதன்முதலாக ஆன்லைனில் விற்க ஆரம்பித்தேன். அதற்கு அதிக வரவேற்பு கிடைத்தது.

அப்போது நான் சந்தித்த முதல் நெருக்கடி, எனது சொந்த கிராமத்தில் சரியான கொரியர் வசதி இல்லை. அதற்காக நீண்டதூரம் பயணிக்க வேண்டிஇருந்தது. மனம் தளராமல் அதையும் செய்தேன்.

பின்னர் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தை அணுகினேன். அவர்கள், எங்கள் ஊரில் எனது நிறுவனத்திற்காகவே ஒரு அலுவலகத்தை திறந்தனர். எனக்கு அது மிகவும் உத்வேகத்தை அளித்தது.

இரண்டாவது நெருக்கடி, நான் என்ன தொழில் செய்கிறேன் என்பதை வெளியில் சொல்லத் தயங்கினேன். சிறுவயதில் இருந்தே படிப்பில் ஜொலித்த காரணத்தினால், என் மீது மற்றவர்களுக்கு இருந்த எதிர்பார்ப்பு அதிகம். பெரிய உத்தியோகத்தில் பணியாற்றாமல், சேலை விற்கிறேன் என்று தெரிந்தால் பலரின் விமர்சனத்திற்கு ஆளாவேன் என்று பயந்து, முதல் இரண்டு வருடம் யாருக்கும் தெரியாமல் விற்றேன். பின்னர் அந்த எண்ணத்தை உடைத்தெறிந்து, தாழ்வுமனப்பான்மையில் இருந்து வெளியே வந்தேன்.


மூன்றாவது நெருக்கடி, விற்காமல் போன சேலைகளை எனது சொந்த முயற்சியில் புதிய டிசைனில் உருவாக்கினேன். அது வாடிக்கையாளரிடம் நல்ல வரவேற்பை பெற்றது. எனது சொந்த டிசைன்களை சமூக ஊடகத்தில் பதிவிடும்போது, அதை பார்த்த சிலர் அதே டிசைனில் சேலைகள் தயாரித்து குறைந்த தரத்திலும், விலையிலும் விற்க ஆரம்பித்தனர். அது எனது தொழிலுக்கு பெரும் சவாலாக இருந்தது.

ஆனால் காலப்போக்கில் எனது வாடிக்கையாளர்கள் இரண்டையும் வாங்கி ஒப்பிட்டு பார்த்து, நான் தயாரித்த சேலைகள் தரத்துடன் இருப்பதை உணர்ந்து எனது நிரந்தர வாடிக்கையாளர்களாக மாறிவிட்டனர்.

நீங்கள் விருது வாங்கிய தருணத்தைப் பற்றி சொல்லுங்கள்?

விருது விழாவுக்கு என் பெற்றோர் இருவரையும் அழைத்துச் சென்றேன். அந்த விருதை என் அம்மாவுக்கு சமர்ப்பித்தேன். பெற்றோரை வாழ்நாளில் ஒரு முறையேனும் பெருமைப்பட வைக்க வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் இருந்தது. அது இந்த விருது வாங்கிய தருணத்தில் நிறைவேறியது. கணவரும் எனக்கு உறுதுணையாக இருக்கிறார்.

பல பெண்கள் திருமணமானவுடன் தங்கள் கனவையும், லட்சியத்தையும் மறந்து முடங்கி விடுகின்றனர். அவர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது என்ன?

நம் தலைமுறைக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய பரிசு சமூக ஊடகங்கள். அதனை சரியான முறையில் பயன்படுத்தக் கற்றுக்கொள்ள வேண்டும். வெளியில் வேலைக்குச் சென்று சம்பாதிக்க முடியவில்லை

என்றாலும், வீட்டிலேயே விடாமுயற்சியுடன் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி சம்பாதிக்க கற்றுக்கொள்ள வேண்டும். வீட்டிலேயே இருந்தாலும் நினைத்ததை சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை மனதில் விதைத்தால், லட்சியத்தை அடைய முடியும்.

நீங்கள் பெண்களை மட்டுமே பணியில் அமர்த்துவதற்கான காரணம் என்ன?

அனைவருக்கும் உறுதுணையாக இருக்கும் குடும்ப பெண்களுக்கு, பல நேரங்களில் குடும்பத்தின் ஆதரவு கிடைப்பதில்லை. இதை நானும் அனுபவித்து இருக்கிறேன். இந்த ஆதரவை மற்ற பெண்களுக்கு தர விரும்பி, என் கிராமத்தில் இருக்கும் பெண்களை பணியில் அமர்த்துகிறேன்.

என்னிடம் பணிபுரியும் பெண்களில் பலர் இதற்கு முன்னால் தினக்கூலி வேலை செய்தவர்கள், தந்தை அல்லது தாயை இழந்தவர்கள், கணவனால் கைவிடப்பட்டவர்கள். இவர்களுக்கு என்னால் முடிந்த உதவியை செய்ய விரும்பியே இந்த பணியில் அவர்களை அமர்த்தினேன். நான் செய்த மாற்றம், அவர்கள் வாழ்வில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்பினேன்.

பெண்கள் யாரையும் சார்ந்து வாழாமல், பொருளாதார ரீதியாக தனித்து செயல்பட முடியும் என்று நம்புகிறேன். அதை நோக்கியே பயணிக்கிறேன். 

Tags:    

மேலும் செய்திகள்