ஊட்டி ரெயிலில் ஒலித்த குயில் பாட்டு

மேட்டுப்பாளையத்தில் ரெயில் நகரத் தொடங்கியதும், ஒவ்வொரு பெட்டியாக ஏறி பயணச்சீட்டு சரிபார்ப்பு செய்யும்போது கண்டிப்பான அதிகாரியாகத் தோன்றும் வள்ளி, அந்த வேலையை முடித்துவிட்டு பாட்டுக் கச்சேரியில் களமிறங்கும்போது வேறு ஆளாக மாறிவிடுவார்.

Update: 2022-06-06 05:30 GMT

ட்டி மலை ரெயிலில் பயணம் செய்தவர்களுக்கு, குளுமையாக, நகரும் பச்சைப் பசேல் மலைக்காட்சிகள் கண்களைக் கவர்ந்ததைப்போல, டிக்கெட் பரிசோதகர் வள்ளியின் குரல் மனதைக் கவர்ந்திருக்கும். மேட்டுப்பாளையம் தொடங்கி ஊட்டி செல்லும் அந்த ஐந்து மணி நேரம், பயணிகள் யாரும் சலிப்படையாமல் இருக்க வள்ளி பாட ஆரம்பிப்பார். இனிமையான குரலில் அவர் பாட, உடன் பயணிகளும் பாட, கச்சேரி ஆரம்பிக்கும். ரெயிலில் பயணிக்கும் மொத்த பயணிகளும் உற்சாகமாய் கைதட்டலுடன் ஆர்ப்பரிக்க, ஊட்டி ரெயில் உல்லாசமாய் மலையில் ஏறும்.

1985-ம் ஆண்டு பாலக்காட்டில் ரெயில்வே துறையில், கடைநிலை ஊழியராகப் பணி செய்யத் தொடங்கிய வள்ளி, காலப்போக்கில் தன் விடாமுயற்சியால் பல்வேறு தேர்வுகள் எழுதி படிப்படியாக முன்னேறி டிக்கெட் பரிசோதகராக மாறியதே ஒரு வெற்றிக்கதை.

மேட்டுப்பாளையத்தில் ரெயில் நகரத் தொடங்கியதும், ஒவ்வொரு பெட்டியாக ஏறி பயணச்சீட்டு சரிபார்ப்பு செய்யும்போது கண்டிப்பான அதிகாரியாகத் தோன்றும் வள்ளி, அந்த வேலையை முடித்துவிட்டு பாட்டுக் கச்சேரியில் களமிறங்கும்போது வேறு ஆளாக மாறிவிடுவார். தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி எனப் பல மொழிகளின் புகழ்பெற்ற சினிமாப் பாடல்களும் அவருக்கு அத்துப்படி.

அவரிடம் இதுபற்றிக் கேட்டபோது...

''நான் சிறுவயதில் இருந்தே இளையராஜாவின் ரசிகை. அவரது பாடல்கள் வானொலியில் ஒளிபரப்பாகும்போது கூடவே பாடுவேன். கூச்ச சுபாவம் காரணமாக அதிகம் வெளிப்படுத்தியதில்லை. வேலைக்குச் சேர்ந்த பிறகும் நான், வேலை, குடும்பம் என்றுதான் இருந்தேன். ஊட்டி ரெயிலுக்கு வந்த பிறகுதான் பயணிகளின் உற்சாகத்தைப் பார்த்துவிட்டு நானும் அவர்

களோடு கலக்க ஆரம்பித்தேன். திட்டமேதும் இல்லாமல் அப்படியே ஒருமுறை அவர்களோடு பயணிக்கும் போது 'அந்தாக்‌ஷ்ரி' விளையாட்டுக்காகப் பாட ஆரம்பித்தேன். அப்போதில் இருந்து ஒட்டு மொத்த ரெயில் பயணிகளும் எனக்கு ரசிகர்களாகி, தொடர்ந்து பாட வற்புறுத்தினர்.

அவ்வாறே ஒவ்வொரு நாளும் பாட ஆரம்பித்தேன். அதுவே எனக்குப் பிடித்தமானதாகவும் ஆகிப்போனது. சுற்றுலாவுக்கு வருபவர்களின் கவலையை மறக்கச் செய்வதும் எனது பணிகளில் ஒன்றாகக் கருதி பாட ஆரம்பித்தேன். அதற்கு இவ்வளவு வரவேற்பு கிடைக்குமென எதிர்பார்க்கவில்லை'' என்கிறார்.

கடந்த ஏப்ரல் மாத இறுதியில் வள்ளி பணி ஓய்வு பெற்றதை ஒட்டி மேட்டுப்பாளையம் ரெயில் நிலையமே அவரது விடைபெறலை விழாவாகக் கொண்டாடியது. பயணிகள் பலரும் வந்திருந்து ரோஜாக்கள் கொடுத்து அவரைப் பெருமைப்படுத்தினர்.

யார் ஒருவர் தன் கடமையை ரசித்துச் செய்கிறார்களோ, அவர்களை ஊரும் உலகும் போற்றும் என்பதற்கு வள்ளி ஒரு உதாரணம். 

Tags:    

மேலும் செய்திகள்