பகவான் கிருஷ்ணரின் கடைசி லீலை அரங்கேறிய தலம்

பால்கா தீர்த்தத்தில் இருந்துதான் பகவான் கிருஷ்ணர் தனது அவதார காலம் முடிவடைந்து, தனது பூத உடலை விட்டு வெளியேறி வைகுண்டத்திற்கு புறப்பட்டுச் சென்றதாக புராணங்கள் கூறுகின்றன.;

Update:2025-09-16 14:34 IST

மகா விஷ்ணுவின் அவதாரங்களில் கிருஷ்ணாவதாரம் மிகவும் பூரணத்துவமான அவதாரமாக போற்றப்படுகிறது. அவர் நிகழ்த்திய ஒவ்வொரு லீலையும், ஒவ்வொரு செயலும், அவரது போதனைகளின் ஒவ்வொரு வார்த்தையும் மனிதகுலத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்தவை ஆகும். தர்மத்தை நிலைநாட்டும் வகையில் பகவான் கிருஷ்ணர் நிகழ்த்திய லீலைகளை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு ஆலயங்கள் அமைந்துள்ளன.

அவ்வகையில், பகவான் கிருஷ்ணரின் கடைசி லீலையை உணர்த்தும் வகையில் அமைந்த ஆலயம் குஜராத் மாநிலம் சோம்நாத் அருகில் உள்ளது. சோம்நாத்தின் வடமேற்கே வெராவல் நகரத்திற்கு செல்லும் வழியில் உள்ள இக்கோவில் பால்கா தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.

இந்த இடத்தில் இருந்துதான் பகவான் கிருஷ்ணர் தனது அவதார காலம் முடிவடைந்து, தனது உடலை விட்டு வெளியேறி வைகுண்டத்திற்கு புறப்பட்டுச் சென்றார். ஜரா என்ற வேடன் மான்களை வேட்டையாட வந்தபோது, ஒரு மரத்தடியில் யோக நிஷ்டையில் இருந்த கிருஷ்ணரை மான் என தவறாகக் கருதி, அம்பெய்தான். அந்த அம்பு பகவான் கிருஷ்ணரின் பாதத்தை தாக்கியது. இந்த நிகழ்வு கிருஷ்ணரின் கடைசி லீலையாகக் கருதப்படுகிறது. காலில் அடிபட்ட பின் இப்பகுதியில் இருந்து சில கிலோ மீட்டர் தூரம் நடந்து ஸ்ரீ கோலோக் தாம் தீர்த்தத்திற்கு சென்றுள்ளார் பகவான். அங்கிருந்து தனது பூத உடலை விட்டு விடைபெற்று சென்றதாக புராணங்கள் கூறுகின்றன.

பால்கா தீர்த்தம்

பால்கா தீர்த்தம் எனப்படும் கிருஷ்ணர் கோவில் சோத்நாத் நகரத்தின் மிகவும் அற்புதமான கோவில்களில் ஒன்றாகும். இங்கு கிருஷ்ணரின் நினைவாக ஒரு துளசி நடப்பட்டுள்ளது. கற்களால் கட்டப்பட்டகோவிலின் முன்புறத்தில் ஆலமரங்கள் நிறைந்து உள்ளன. சன்னதியின் உள்ளே சாய்ந்து அமர்ந்திருந்த கோலத்தில் பகவான் கிருஷ்ணர் காட்சியளிக்கிறார். இது வேறு எந்த ஆலயத்திலும் இல்லாத சிறப்பு அம்சமாகும். இதுதவிர புல்லாங்குழல் வாசிக்கும் அழகிய திருக்கோலத்துடன் கூடிய கிருஷ்ணர் சிலையும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

கோவிலுக்கு செல்ல உகந்த காலம்: நவம்பர் முதல் பிப்ரவரி வரையிலான காலத்திலும், ஜன்மாஷ்டமியின் போதும் இக்கோவிலுக்கு சென்று பகவானை தரிசனம் செய்யலாம்.

அமைவிடம்

சோமநாத் கோவிலில் இருந்து 4 கி.மீ தொலைவிலும், சோம்நாத் ரெயில் நிலையத்திலிருந்து 5 கி.மீ தொலைவிலும் இக்கோவில் உள்ளது. நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து சோம்நாத்திற்கு ரெயில்கள் உள்ளன. அங்கிருந்து எளிதாக கோவிலை சென்றடையலாம்.

இதேபோல் பகவான் கிருண்ணர், காலில் அம்பு பட்ட காயத்துடன் நடந்து சென்ற இடமான கோலோக் தாம் தீர்த்தத்திலும் ஒரு ஆலயம் அமைந்துள்ளது. ஹிரன் நதிக்கரையோரம் அமைந்துள்ள இக்கோவில் தேஹோத்சர்க் தீர்த்தம் என்றும் அழைக்கப்படுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்