களக்காடு சிதம்பரபுரம் நாராயண சுவாமி கோவிலில் ஆனி திருவிழா தொடங்கியது

ஆனித் திருவிழா கொடியேற்றத்திற்குப் பின்னர் நாராயணசுவாமி தொட்டில் வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.;

Update:2025-06-27 13:16 IST

களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீமந் நாராயணசுவாமி கோவில் உள்ளது. அய்யா நாராயணசுவாமி இங்கு நரசிம்ம அவதார மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார். தென் மாவட்டங்களில் பிரசித்திப் பெற்ற இந்த கோவிலில் முதல் தேரோட்டம் 1929ம் ஆண்டு நடந்தது. அதனைதொடர்ந்து ஆண்டுதோறும் தேரோட்டத் திருவிழா 12 நாட்கள் வெகு விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி 96வது ஆனித் திருவிழா இன்று தொடங்கியது. இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டது. அதனைதொடர்ந்து திருப்பள்ளி எழுப்புதல் நடந்தது. அய்யா நாராயணசுவாமிக்கு சிறப்பு பள்ளியறை அலங்காரமும், விஷேச பணிவிடைகளும் நடத்தப்பட்டது. அதன் பின் அய்யா நாராயணசுவாமி நாற்காலியில் எழுந்தருளி கோவிலை வலம் வந்தார். தொடர்ந்து காலை 6.55 மணிக்கு மேளதாளங்கள் முழங்க கோவில் கொடிமரத்தில் திருக்கொடி ஏற்றப்பட்டது. பின்னர் நாராயணசுவாமி தொட்டில் வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்தார்.

விழாவில் களக்காடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, "அய்யா சிவசிவ சிவசிவ அரகரா அரகரா" என்ற பக்தி முழக்கத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.

விழா நாட்களில் தினசரி காலை மற்றும் இரவில் அய்யா நாராயணசுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வருகிறார். விழாவின் 8-ம் நாளான ஜூலை 4ம் தேதி (வெள்ளிக்கிழமை) பரிவேட்டை விழா நடக்கிறது. அன்று மாலை 5 மணிக்கு பகவான் வைகுண்டர் குதிரை வாகனத்தில் எழுந்தருளி ஊருக்கு மேற்கே உள்ள ஆற்றில் பரிவேட்டையாடுகிறார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்ட விழா 7ம் தேதி (திங்கள் கிழமை) நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. கலைநிகழ்ச்சிகளும் நடக்கிறது. 

Tags:    

மேலும் செய்திகள்