பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோவில் தேரோட்டம்
தேரோட்டத்தைத் தொடர்ந்து உற்சவ பெருமாளுக்கும், மூலவருக்கும் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.;
விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகே உள்ள பூவரசன்குப்பம் கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் உள்ளது. தென் அஹோபிலம் என்று போற்றப்படும் இக்கோவில், கி.பி. 7-ம் நூற்றாண்டில் முதலாம் பல்லவ மன்னரால் கட்டப்பட்டது.
தமிழகத்தின் முக்கிய 8 நரசிம்மர் கோவில்களில் பூவரசன்குப்பம் கோவில், நடுவில் இருக்கிறது. இக்கோவிலில் மூலவர் லட்சுமி நரசிம்மர், 4 கரங்களுடன் காணப்படுகிறார். இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் பிரம்மோற்சவ விழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
அதுபோல் இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழா கடந்த 5-ந் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, ஒவ்வொரு நாளும் காலை, மாலை வேளைகளில் வாகன சேவை நடைபெற்றது. ஹம்ச வாகனம், சூர்யபிரபை, கருட சேவை, அனுமந்த வாகனம், சேஷ வாகனம், சந்திரபிரபை, யாளி வாகனம், யானை வாகனம், கற்பக விருட்சம் வாகனம், குதிரை வாகனங்களில் லட்சுமி நரசிம்ம சுவாமி எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விழாவின் முக்கிய நிகழ்வாக பிரம்மோற்சவத்தின் 9-ம் நாளான இன்று தேரோட்டம் நடைபெற்றது. காலை 7 மணியளவில் மேளதாளம் முழங்க, உற்சவ பெருமாள் சிறப்பு மலர் அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார். பின்னர் தேரோட்டம் நடைபெற்றது. கோவிந்தா கோவிந்தா என்ற பக்தி கோஷங்களை எழுப்பியவாறு ஏராளமான பக்தர்கள், வடம்பிடித்து தேர் இழுத்தனர். கோவில் முன்பிருந்து புறப்பட்ட தேர், 4 மாடவீதிகள் வழியாக பக்தர்களின் வெள்ளத்தில் ஆடி, அசைந்தவாறு சென்று, மீண்டும் கோவிலை வந்தடைந்தது.
அதன் பிறகு உற்சவ பெருமாளுக்கும், மூலவருக்கும் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் பூவரசன்குப்பம், அதன் சுற்றுவட்டார பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ராமலிங்கம், அர்ச்சகர் பார்த்தசாரதி பட்டாச்சாரியார் மற்றும் கோவில் பணியாளர்கள், கிராம மக்கள் செய்திருந்தனர்.