ஜெபமே ஜெயம்: இதயத்தின் விருப்பங்களை நிறைவேற்றும் தேவன்

வாழ்க்கையில் என்ன கசப்பான சூழ்நிலைகளை கடந்து சென்று கொண்டிருந்தாலும் இறைமகன் இயேசு மீது அந்த பாரத்தை வைத்து விட்டு முடிந்தவரை முயற்சிகளை செய்யவேண்டும்.;

Update:2025-11-26 15:56 IST

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நம்பி இருக்கிறவர்கள் பாக்கியவான்கள். அவர்களின் இதயத்தில் உள்ள, விருப்பங்கள், வேண்டுதல்கள், காத்திருப்புகள், அனைத்தும் நிறைவேறும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை. அதி சீக்கிரமாய் நெருங்கி வருகிறது.

வேதம் சொல்கிறது: “நெடுங்காலமாய்க் காத்திருக்குதல் இதயத்தை இளைக்கப்பண்ணும்: விரும்பினது வரும் போதோ ஜீவவிருட்சம்போல் இருக்கும்". (நீதிமொழிகள் 13:12)

ஏதோ ஒரு நன்மைக்காக, காத்திருந்து... காத்திருந்து... சலித்துப்போய், வேதனையோடு, கவலையோடு இருக்கிறவர்களைப் பார்த்து கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சொல்லுகிறார்: 'நெடுங்காலமாய் நீங்கள் காத்திருந்த காரியத்திற்கு ஒரு புதிய விடிவு வந்து கொண்டிருக்கிறது, அது நிச்சயமாக வரும் கவலைப்படாதீர்கள்'.

“நிச்சயமாகவே ஒரு முடிவு உண்டு, உன் நம்பிக்கை வீண் போகாது”. (நீதிமொழிகள் 23:18)

கடந்த காலங்களில் நடந்த துயரமான நிகழ்வுகளை, கண்ணீர் சிந்திய நிகழ்வுகளை, அவமானங்களை இனி நினைக்க வேண்டாம்.

"முந்தினவைகளை நினைக்க வேண்டாம், பூர்வமானவைகளைச் சிந்திக்க வேண்டாம். இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன், இப்பொழுதே அது தோன்றும், நீங்கள் அதை அறிவீர்களா? நான் வனாந்தரத்திலே வழியையும், அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவேன்”. (ஏசாயா 43:18,19).

இது தொடர்பாக வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு சம்பவம் ஆச்சரியம் நிறைந்தது. அது இறைவனின் அருள்மழை பொழிந்து நிகழ்த்திய மாற்றம் குறித்தது. அதுபற்றி பார்ப்போம்.

ரூத் என்ற அருமையான சகோதரி இருந்தார். இவருடைய கணவர் இறந்து விட்டார். ஆனால் அவர் தன்னுடைய கணவரின் அம்மாவான நகோமியை (மாமியார்) விட்டு பிரியாமல், அவருடன் அவரது ஊருக்குச் செல்கிறார். அங்கு அவர் வயல் வேலைக்கு செல்கிறார். அதில் கிடைக்கும் வருமானத்தைக்கொண்டு தானும், தன் மாமியாரும் வாழ்க்கை நடத்த பாடுபடுகிறார்.

அறுவடைக்காலத்தில் ஏழைகள் வயலில் அரிக்கட்டுகளிலிருந்து சிந்தினதைப் பொறுக்கிக்கொள்ள அப்போதுள்ள எபிரெயச் சட்டம் அனுமதித்திருந்ததை ரூத் அறிந்துகொண்டாள். வயல்களிலிருந்து தன்னால் இயன்ற அளவு தானியங்களை சேகரித்து தன்னுடைய மாமியார் நகோமியை நன்கு கவனித்தார்.

அவள் சென்ற வயல் போவாஸ் என்பவருடையது. அவர் ஒரு செல்வந்தர் மட்டுமல்ல, ஒரு நீதிமான். ஒரு நாள் வயல்வெளியில் ரூத் கதிர்களைப் பொறுக்கிக் கொண்டிருக்கும் பொழுது போவாஸ் அங்கு வந்தார். இது தற்செயலாக நிகழ்ந்தது. இங்கே தேவனுடைய வழி நடத்துதலை நாம் காண்கிறோம்.

போவாஸ், ரூத்தின் மேல் இரக்கப்பட்டு தன்னுடைய வயலில் மாத்திரமே நெல்மணிகளை பொறுக்கிக்கொள்ள அவளிடம் கூறுகிறார். மேலும், ரூத் நெல்மணிகளை சேகரித்துக்கொள்ள உதவியாக நெற்கதிர்களில் இருந்து நெல்மணிகள் சிலதைச் சிந்தவிடுங்கள், அவளை அதட்டாதிருங்கள் என்று தன் வேலைக்காரருக்குக் கட்டளையிடுகிறார்.

ரூத் இஸ்ரவேலின் கர்த்தரை நம்புகிறாள், தன்னுடைய மாமியாரை சொந்த அம்மாவை போல கவனிக்கிறாள்.

எந்த வயல் நிலத்தில் வேலைக்கு சென்றாளோ, அந்த வயல் நிலத்தின் உரிமையாளரான போவாஸை பிற்காலத்தில் மணந்து கொள்கிறாள். இவர்களுடைய சந்ததியில் தான் இஸ்ரவேலின் புகழ் பெற்ற தாவீது அரசர் தோன்றுகிறார். அதற்கும் மேலாக, நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வம்ச வரலாறு அட்டவணையில் அவளுடைய பெயரும் காணப்படுவது அதிக விசேஷமானது. ஓர் ஏழை விதவையாக மாமியாருடன் ஊர் விட்டு ஊர் சென்று, வயல்களில் கூலி வேலை செய்து, இறுதியில் ராஜாக்களை பெற்ற வம்ச வரலாற்றில் இடம் பெற்றார்.

இதுவே நம் தேவனுடைய அன்பு, இரக்கம். இதுவே அவள் கசப்புக்கு, கண்ணீருக்கு, வேதனைக்கு, தேவன் அளித்த விலைமதிப்பில்லா பரிசு ஆகும்.

ஆகவே, நாமும் நம்முடைய வாழ்க்கையில் என்ன கசப்பான சூழ்நிலைகளை கடந்து சென்று கொண்டிருந்தாலும் இறைமகன் இயேசு மீது அந்த பாரத்தை வைத்து விட்டு, நம்மால் முடிந்தவரை முயற்சிகளை செய்யவேண்டும். முடிவில் அவர் நம்முடைய பாதையை ராஜ பாதையாக மாற்றுவார். நம்முடைய மன விருப்பத்தின்படி, அவர் நமக்கு தந்து நம்முடைய ஆலோசனைகளை நிறைவேற்றுவார்.

“நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்”. (1 கொரிந்தியர் 15:57)

ஆகவே பிரியமான சகோதரரே, சகோதரியே, கர்த்தருக்குள் நீங்கள் படுகிற பிரயாசங்கள் வீணாகாதென்று நீங்கள் அறிந்து, நம்பிக்கையுடன் காத்திருங்கள்.

வேதம் சொல்லுகிறது; “உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து, உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்: அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்”. (நீதிமொழிகள் 3:5,6)

ஆம் அன்பானவர்களே, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவில் உறுதியுடன் நம்பிக்கையாயிருந்து வெற்றியை சுதந்தரித்துக் கொள்வோம், ஆமேன்.

-டாக்டர் ஒய்.ஆர்.மானெக்க்ஷா, நெல்லை.

Tags:    

மேலும் செய்திகள்