பரமத்திவேலூர் பகுதிகளில் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு பூஜை- ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகருக்கு வாசனை திரவியங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.;

Update:2025-06-15 12:07 IST

சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் தாலுகாவில் உள்ள விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

பரமத்திவேலூர், பேட்டையில் உள்ள பஞ்சமுக ஹேரம்ப விநாயகர், கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள விநாயகர், பொத்தனூர், வெங்கமேடு வல்லப கணபதி, பரமத்தி வேலூர் செட்டியார் தெருவில் உள்ள சக்தி விநாயகர் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு விநாயகப் பெருமானை தரிசனம் செய்தனர்.

அதேபோல் பரமத்திவேலூர் சக்திநகரில் உள்ள விநாயகர், பரமத்திவேலூர் காவிரி கரையில் அமைந்துள்ள சத்திரத்து விநாயகர், பொத்தனூர் மகா பகவதியம்மன் கோயிலில் உள்ள விநாயகர் மற்றும் பரமத்திவேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில். உள்ள விநாயகர் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு விநாயகப் பெருமானை தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்