மாசி மகம் உருவானது எப்படி?

மாசி மகத்தன்று கும்பகோணம் மகாமக குளத்தில் புனித நீராட முடியாதவர்கள் தங்கள் பகுதியில் உள்ள நீர் நிலைகளில் நீராடலாம்.;

Update:2025-03-11 16:44 IST

கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, கோதாவரி, காவிரி, சரயு, துங்கபத்ரா, கிருஷ்ணா ஆகியன நவநதிகள் என போற்றப்படுகின்றன. புண்ணிய நதிகளாக போற்றப்படும் இந்த நதிகளில் நீராடினால் பாவங்கள் தொலையும் என்பது ஐதீகம். இதனால் ஆண்டு முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் இந்த நதிகளில் புனித நீராடுகின்றனர்.

இதன் காரணமாக இந்த புனித நதிகளில் அதிக பாவங்கள் சேர்ந்தன. இதனால் கவலை அடைந்த இந்த நவ நதிகளும் சிவபெருமானிடம் சென்று, தங்களிடம் சேர்ந்த பாவங்களை போக்கிக் கொள்ள என்ன வழி என கேட்டன. அதற்கு அவர், 'மக நட்சத்திரமும் பவுர்ணமியும் இணையும் மாசி மாதத்தில் கும்பகோணத்தில் அக்னி திக்கில் உள்ள தீர்த்தத்தில் நீராடி உங்களின் பாவங்களை தீர்த்துக் கொள்ளுங்கள்' என்றார்.

அதன்படி நவநதிகளும் கும்பகோணம் தீர்த்த குளத்தில் எழுந்தருளி, தங்களின் பாவத்தை போக்கிக் கொண்டு, புனிதமடைந்ததாக புராணக் கதைகள் உள்ளன. அந்த குளம்தான் கும்பகோணம் மகாமக குளம்.

இதே போன்று வருண பகவானின் தோஷத்தை போக்கிய சிவபெருமான், இந்த நாளில் யார் ஒருவர் நீர் நிலைகளில் நீராடுகிறார்களோ அவர்களின் பாவங்கள், தோஷங்கள் அனைத்தும் நீங்கும் என வரமளித்த நாளும் மாசி மகம் தான்.

திருவண்ணாமலை பகுதியை ஆண்ட அரசர்களில் புகழ்பெற்ற அரசான வல்லாள மகாராஜாவுக்கு சிவபெருமானே மகனாக வந்து பிறந்தார் என்பது நம்பிக்கை ஆகும். இறந்து போன தனது தந்தை வல்லாள மகராஜாவுக்கு மாசி மகம் நாளில் சிவபெருமானே திதி கொடுக்கும் நிகழ்ச்சி திருவண்ணாமலையில் நடந்து வருகிறது.

என்ன செய்ய வேண்டும்?

மாசி மகம் அன்று வாய்ப்பு இருப்பவர்கள் கும்பகோணம் மகாமக குளத்திற்கு சென்று, அதிகாலையில் நீராடி, கோவிலுக்கு சென்று வழிபடலாம். கும்பகோணம் செல்ல முடியாதவர்கள் தங்கள் பகுதியில் உள்ள ஆறு, கோவில் குளங்கள், நீர் நிலைகளில் நீராடலாம். மாசி மகத்தன்று அனைத்து நீர் நிலைகளிலும் இந்த புண்ணிய நதிகள் எழுந்தருள்வதாக ஐதீகம். அதனால் மற்ற நீர்நிலைகளில் நீராடி, கும்பகோணம் குளத்தில் நீராடிய பலனை பெறலாம். இந்த ஆண்டு மாசி மகம் நாளை (12.3.2025) கொண்டாடப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்