இன்று புன்னாக கௌரி விரத நாள்

புன்னாக கௌரி விரதம் மற்றும் பூஜையை செய்தால் மனதிலுள்ள சஞ்சலங்கள் விலகி அமைதி ஏற்படும்.;

Update:2025-05-27 06:00 IST

அன்னை பராசக்தியின் வடிவங்களில் 'கௌரி ரூபம்' தனித்துவமான சிறப்புகொண்டது. தவ வடிவம் கொண்ட சக்தியே, 'கௌரி' எனப்படுகிறாள். ஞானியர்கள் அன்னை கௌரியை 108 வித வடிவங்களில் வடிவமைத்து வணங்கி வந்தனர்.

அவற்றில் ஞான கௌரி, அமிர்த கௌரி, சுமித்ர கௌரி, சம்பத் கௌரி, யோக கௌரி, வஜ்ரச்ருங்கல கௌரி, த்ரைலோக்ய மோகன கௌரி, சுயம்வர கௌரி, கஜ கௌரி, கீர்த்தி கௌரி, சத்யவீர கௌரி, வரதான கௌரி, சுவர்ண கௌரி, சாம்ராஜ்ய கௌரி, அசோக கௌரி, மனோரத பூர்த்தி கௌரி ஆகிய 16 வடிவங்கள் (சோடஷ கௌரிகள்) சிறப்பாக போற்றப்படுகின்றன.

கௌரி வழிபாடு குறித்து பல்வேறு புராணங்களில் சொல்லப்பட்டுள்ளன. அதில் வைகாசி மாதம் வளர்பிறை பிரதமை திதியன்று அனுஷ்டிக்கும் கௌரி விரதத்துக்கு புன்னாக கௌரி விரதம் எனப் பெயர். இன்று (27.5.2025) புன்னாக கௌரி விரத தினமாகும்.

இந்த நாளில் விரதம் இருந்து கௌரி பூஜை செய்யும் சுமங்கலிப் பெண்கள், மாலை சூரியன் அஸ்தமனத்துக்குப்பின் சுமார் 6.30 மணி முதல் 8.30 மணிக்குள் பூஜையைச் செய்ய வேண்டும். புன்னை மரத்தடியில் பூஜை செய்வது சிறப்பு. அருகில் புன்னை மரம் இல்லாவிட்டால் வீட்டில் புன்னை மரப் பூக்கள் மற்றும் இலைகளின் மீது சிவனும் பார்வதியும் ஒன்றாகச் சேர்ந்திருக்கும் விக்ரகம் (அ) படத்தை கிழக்கு திசை நோக்கி வைத்து பூஜை செய்யலாம்.

அம்மனுக்கு வலப்புறம் நெய் தீபமும், இடப்புறம் நல்லெண்ணெய் தீபமும் ஏற்றிவைக்க வேண்டும். கௌரியை (பார்வதியை) புன்னைமரப் பூக்களாலோ, இலைகளாலோ அர்ச்சித்து வழிபடவேண்டும். மாதுளம் பழம், தேன் நிவேதனம் செய்ய வேண்டும்.

இன்று மாலை அருகிலுள்ள சிவன் ஆலயம் சென்று தரிசனம் செய்ய வேண்டும். இந்த புன்னாக கௌரி விரதம் மற்றும் பூஜையை முறையாகச் செய்யும் குடும்பத்தில் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் அன்புடனும், பாசத்துடனும் இருப்பார்கள். மனதிலுள்ள சஞ்சலங்கள் விலகி மனதில் அமைதி ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும் என்பது நம்பிக்கை.

Tags:    

மேலும் செய்திகள்