இன்புளூயன்சா காய்ச்சல்: அறிகுறிகளும்.. தடுப்பு முறைகளும்
வயதானவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் நாள்பட்ட நோய்கள் உள்ளவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு இன்புளூயன்சா வைரஸ் எளிதில் பரவக்கூடும்.;
தமிழ்நாட்டில் சில பகுதிகளில் காய்ச்சல் பரவி வருகிறது. இது சாதாரண இன்புளூயன்சா காய்ச்சல் மட்டுமே என்றும் புதிய வகை வைரஸ் தொற்று அல்ல என்றும் பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இருப்பினும் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டியது அவசியம். சில நோயாளிகளுக்கு இன்புளூயன்சா ஏ தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாகவும், காய்ச்சல் ஏற்பட்டால் தாமதம் இன்றி ரத்தப் பரிசோதனை மேற்கொள்ளவும் சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
இன்புளூயன்சா ஏ (எச்1என்1, எச்3என்2) மற்றும் இன்புளூயன்சா பி போன்ற குறிப்பிட்ட வகை வைரஸ்கள் இந்த நோய் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. பொதுவாக மழைக்காலம் மற்றும் குளிர் காலங்களில் இந்த காய்ச்சல் பரவி நோய் பாதிப்பை ஏற்படுத்துவதுண்டு. தற்போது மழைக்காலம் தொடங்கி பருவ நிலை மாறி இருப்பதால் சில இடங்களில் காய்ச்சல் பரவுகிறது.
இன்புளூயன்சா வைரசின் அறிகுறிகள்
* உடல் வெப்பநிலை அதிகரித்து காய்ச்சலை உண்டாக்கும்.
* தொடர்ந்து இருமல் ஏற்படலாம்.
* உணவுப்பொருளை விழுங்குவதில் சிரமம் ஏற்படும். அல்லது தொண்டை வலி உண்டாகும்.
* உடல் சோர்வுடன் காணப்படும்.
* உடல் முழுவதும் வலி உண்டாகும். குறிப்பாக தசைகள் மற்றும் தலையில் அதிக வலியை உணரலாம்.
* காய்ச்சல் இருந்தாலும் உடல் குளிர்வது போன்ற உணர்வும் ஏற்படும்.
* சளி ஒழுகுதல் அல்லது மூக்கடைப்பு ஏற்படக்கூடும்.
* தலைவலி உண்டாகும்.
* சிலருக்கு குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு உண்டாகும்.
மருத்துவ ஆலோசனை
* இந்த அறிகுறிகள் கடுமையாக இருந்தால், மருத்துவரை அணுக வேண்டும்.
* வயதானவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் நாள்பட்ட நோய்கள் உள்ளவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு இந்த வைரஸ் காய்ச்சல் எளிதில் பரவக்கூடும். அதனால் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டியது அவசியம்.
சிகிச்சை முறை
குழந்தைகளுக்கு தொடர் காய்ச்சல், உணவு உண்ண முடியாத நிலை இருந்தால் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை கட்டாயம் செய்ய வேண்டும்.
மூச்சு விடுவதில் சிரமம் இருந்தாலும் இன்புளூயன்சாவுக்கான ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை செய்ய வேண்டும்.
தடுப்புமுறை
* உடலை நீரேற்றமாக வைத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக திரவ உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். தண்ணீரும் அதிகம் பருக வேண்டும். நன்றாக ஓய்வெடுக்க வேண்டும்.
* இந்த வைரஸ் பரவுவதை தடுக்க அடிக்கடி கை கழுவுவது அவசியமானது. வெளி இடங்களுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பும்போதும், சாப்பிடுவதற்கு முன்பும் கண்டிப்பாக கைகளை கழுவ வேண்டும். சோப்பு அல்லது கிருமிகளை நீக்கும் ‘ஹேண்ட் வாஷ்’ பயன்படுத்தி கைகளை சுத்தம் செய்வது நல்லது.
* லேசான காய்ச்சல் அறிகுறிகள் உள்ளவர்கள் 7 நாட்கள் வரை வீட்டில் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கு பரவுவதை தடுக்க அது உதவும்.