நிலவேம்பு கஷாயம்-கபசுர குடிநீர்: காய்ச்சலுக்கு எது சிறந்தது?
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும், சளி, காய்ச்சல் மற்றும் இருமல் போன்ற சுவாச நோய்களை குணப்படுத்தவும் கபசுர குடிநீர் உதவும்.;
மழைக்காலம் தொடங்க உள்ள நிலையில், மழைக்கால நோய்களின் பாதிப்பில் இருந்து மக்கள் தற்காத்துக்கொள்ள வேண்டியது அவசியம். மழைக்காலத்தில் பொதுவாக சளி, காய்ச்சல் போன்ற பாதிப்புகள் அதிகமாக இருக்கும். ஈரப்பதம் அதிகரிப்பதாலும், உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவதாலும், இன்புளூயன்சா எனப்படும் புளூ காய்ச்சல் மற்றும் நிமோனியா உள்ளிட்ட சுவாசம் தொடர்பான நோய்கள் ஏற்படும்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், காய்ச்சல் பாதிப்புகளில் இருந்து மீண்டு வரவும் பலரும் சித்த மருத்துவத்தில் கஷாயம் மற்றும் மூலிகை குடிநீர் ஆகியவற்றை பயன்படுத்துவதுண்டு. அந்த வகையில் காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்கு நிலவேம்பு கசாயம் சிறந்ததா? கபசுர குடிநீர் சிறந்ததா? என்பதை பார்ப்போம்.
நிலவேம்பு கசாயம்
மூலிகை தாவரமான நிலவேம்பு, காய்ச்சலைக் குறைக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது. உடலில் சேரும் அதிக நச்சுகள் காரணமாக காய்ச்சல் ஏற்படும். நிலவேம்பு நிலைமையை மோசமாக்காமல் நச்சுகளை வெளியேற்ற உதவும். வைரஸ் தொற்றுகளுக்கு எதிராக வலுவான நோய் எதிர்ப்பு சக்தியை வளர்க்க உதவிடும். காய்ச்சலை முக்கிய அறிகுறியாக கொண்டிருக்கும் எந்தவொரு நோய் அல்லது வைரஸ் தொற்றுக்கும் நிலவேம்பு கசாயத்தை சிகிச்சையாக பயன்படுத்தலாம். காய்ச்சலுடன் தலைவலி, உடல் வலி, சோர்வு மற்றும் வீக்கம் போன்ற அறிகுறிகளைப் போக்க உதவுகிறது. குறிப்பாக டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது. காய்ச்சல் போன்ற கடுமையான அறிகுறிகளை தடுக்க காலை, மாலை இரண்டு வேளை என 3 நாட்களுக்கு பருகலாம். நோயின் வீரியம் குறையவில்லை என்றால் மருத்துவரின் ஆலோசனைப்படி சிகிச்சையை தொடருவது நல்லது.
கபசுர குடிநீர்
20-க்கும் மேற்பட்ட இயற்கை மூலப்பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் இது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும், சளி, காய்ச்சல் மற்றும் இருமல் போன்ற சுவாச நோய்களை குணப்படுத்தவும் உதவக்கூடியது. சித்த மருத்துவத்தில் கபசுர குடிநீருக்கு ‘காய்ச்சலை குணப்படுத்துபவர்’ என்ற புனைப்பெயரும் உண்டு. பண்டைய காலங்களில் வைரஸ் தொற்று அல்லது தொற்றுநோய் பரவியபோது காய்ச்சல் என்பது முதன்மையான, பொதுவான அறிகுறியாக வெளிப்பட்டது. அப்போது உடலில் வெப்பநிலை அதிகரித்து தீங்கு விளைவிக்கும் ஆன்டிஜென்களை கொல்வதற்கு ஆன்டிபாடிகள் முயற்சிக்கும். அவை ஏற்படுத்தும் பக்கவிளைவுகள் காரணமாக கண்களில் நீர் வடிதல், உடல் வலி, சளி, இருமல் போன்றவை சுவாச அமைப்பு முழுவதற்கும் வைரஸ் தொற்றாக பரவி விடும். அதுவே உடல் பலவீனத்துக்கு காரணமாகிவிடும்.
கபசுர குடிநீர், வைரஸ் அல்லது நுண்ணுயிரிகளுடன் நேரடியாக போராடுவதில்லை. மாறாக, நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்த முயற்சிக்கும். குறிப்பாக சுவாசக்குழாயில் உள்ள ரத்த வெள்ளை அணுக்களை வலுவடைய செய்யும். அவை தொற்றுக்கு எதிராக போராடி நோயை குணப்படுத்த உதவிடும். இத்தகைய நோய் பாதிப்புக்குள்ளான சமயத்தில் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் தினமும் இரண்டு வேளை வீதம் பருகலாம். சாப்பிடுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு பருகுவது சிறந்தது.
தயாரிப்பு முறை
240 மி.லி. நீரில் ஒரு டேபிள்ஸ்பூன் நிலவேம்பு கஷாய பவுடர் அல்லது கபசுர குடிநீர் கலவையை போட்டு கொதிக்க வைக்கவும். நீரின் அளவு 60 மி.லி. அளவுக்கு சுண்டியபின் வடிகட்டி பருகலாம்.
எது சிறந்தது?
நிலவேம்பு கஷாயம், கபசுர குடிநீர் இரண்டுமே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், வைரஸ் தொற்றுகளைத் தடுக்கவும் போராடக்கூடியவை. காய்ச்சலுடன் சுவாசம் சார்ந்த நோய் பாதிப்புகள் இருந்தால் கபசுரக்குடிநீரை பருகலாம். காய்ச்சல் மட்டுமே முதன்மையான நோய் அறிகுறியாக இருக்கும்பட்சத்தில் நிலவேம்பு குடிநீரை பயன்படுத்தலாம். 3 நாட்களுக்குள் குணமாகாதபட்சத்தில் மருத்துவரிடம் நேரடி சிகிச்சை பெறுவது அவசியமானது.