தெருநாய்களை பிடிக்க 8 வாரங்கள் அவகாசம் - சுப்ரீம் கோர்ட்டு
நாடு முழுவதும் உள்ள தெரு நாய் பிரச்சனைகளை போர்க்கால அடிப்படையில் தீர்க்க வேண்டிய நிலை உள்ளது என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.;
புதுடெல்லி,
டெல்லியில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளதாக கடந்த மாதம் பத்திரிகைகளில் செய்தி வெளியானது. குழந்தைகள் கூட நாய்க்கடியால் பாதிக்கப்படுவதாகவும், அதனால் ‘ரேபிஸ்’ நோய் பரவுவதாகவும் அச்செய்தியில் கூறப்பட்டு இருந்தது.நாய்க்கடியின் தீவிரத்தன்மை கருதி, பத்திரிகை செய்தி அடிப்படையில், கடந்த மாதம் 28-ந் தேதி, அந்த விவகாரத்தை சுப்ரீம் கோர்ட்டு தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.
இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, நாய்க்கடி சம்பவங்களை ஒடுக்க நீதிபதிகள் சரமாரி உத்தரவுகளை பிறப்பித்தனர்.
நீதிபதிகள் கூறியதாவது:-
டெல்லியில் தெருநாய் தொல்லை மிகவும் பயங்கரமாக இருக்கிறது. குழந்தைகளும், பச்சிளம் குழந்தைகளும் ‘ரேபிஸ்’ நோய்க்கு வழிவகுக்கும் நாய்க்கடிக்கு இரை ஆகக்கூடாது.ஆகவே, டெல்லியில் அனைத்து பகுதிகளிலும் சுற்றித்திரியும் தெருநாய்களை கூடிய விரைவில் டெல்லி அரசும், உள்ளாட்சி அமைப்புகளும் பிடிக்க வேண்டும். அந்த நாய்களை நாய் காப்பகங்களில் அடைக்க வேண்டும்.தற்போதைக்கு சுமார் 5 ஆயிரம் தெருநாய்களை அடைக்கும் அளவுக்கு காப்பகங்களை உருவாக்க வேண்டும். அங்கு தெருநாய்களுக்கு கருத்தடை செய்யவும், நோய்த்தடுப்பு மருந்துகளை அளிக்கவும் போதிய ஊழியர்களை நியமிக்க வேண்டும்.
நாய்களை காப்பகங்களில்தான் அடைக்க வேண்டுமே தவிர, தெருக்களிலோ, குடியிருப்புகளிலோ, பொது இடங்களிலோ விடக்கூடாது.நாய்க்கடி சம்பவங்கள் குறித்து உடனடியாக புகார் தெரிவிக்க வசதியாக இன்னும் ஒரு வாரத்துக்குள் உதவி மையம் ஒன்றை அதிகாரிகள் உருவாக்க வேண்டும்.அதிகாரிகள் தெருநாய்களை பிடிப்பதற்கு எதிராக தனிநபர்களோ, அமைப்புகளோ குறுக்கே வந்தால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.பொது நன்மையை மனதில் கொண்டு இந்த உத்தரவுகளை பிறப்பிக்கிறோம்.
இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.