மத்திய மந்திரி ஜெய்சங்கர் நாளை இலங்கை பயணம்

‘டிட்வா’ புயலால் கடுமையான பாதிக்கப்பட்ட இலங்கைக்கு இந்தியா நிவாரண உதவிகளை அனுப்பியது.;

Update:2025-12-22 16:38 IST

புதுடெல்லி,

பிரதமர் நரேந்திர மோடியின் சிறப்புத் தூதராக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் செவ்வாய்க்கிழமை(நாளை) இலங்கை செல்ல உள்ளார். இந்த பயணத்தின்போது இலங்கை அரசாங்கத்தின் மூத்த தலைவர்களை ஜெய்சங்கர் சந்தித்து பேச உள்ளார்.

முன்னதாக ‘டிட்வா’ புயலால் கடுமையான பாதிப்புகளை சந்தித்த இலங்கைக்கு உதவிடம் வகையில், இந்திய அரசு சார்பில் ‘ஆபரேஷன் சாகர் பந்து’ என்ற திட்டத்தின்கீழ் இலங்கை மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் பல்வேறு தொகுப்புகளாக அனுப்பி வைக்கப்பட்டன. அந்த திட்டத்தின் பின்னணியில் ஜெய்சங்கரின் இந்த பயணம் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் 28-ந்தேதி 'ஆபரேஷன் சாகர் பந்து' தொடங்கப்பட்டதில் இருந்து, இலங்கைக்கு உலர் உணவுப் பொருட்கள், கூடாரங்கள், தார்ப்பாய்கள், ஆடைகள், நீர் சுத்திகரிப்பு அமைப்புகள், 14.5 டன் மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சை உபகரணங்கள் உட்பட 1,134 டன்களுக்கும் அதிகமான மனிதாபிமான உதவிகளை இந்தியா வழங்கியுள்ளது.

இந்த நிவாரண பொருட்கள் இந்திய கடற்படைக்கு சொந்தமான கப்பல்களான ஐ.என்.எஸ். விக்ராந்த், ஐ.என்.எஸ். உதயகிரி, ஐ.என்.எஸ். சுகன்யா, எல்.சி.யூ.-54, எல்.சி.யூ.-57, எல்.சி.யூ.-51 மற்றும் ஐ.என்.எஸ். காரியல் ஆகியவை மூலம் இந்தியாவில் இருந்து கொழும்பு மற்றும் திருகோணமலைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இந்திய தேசிய பேரிடர் மீட்புப் படையின் இரண்டு குழுக்கள் இலங்கையில் அவசரகால தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டன. அதே நேரம், மஹியங்கனையில் அமைக்கப்பட்ட இந்திய ராணுவத்தின் 85 பேர் கொண்ட மருத்துவ முகாமில் 7,000-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு உயிர்காக்கும் மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்