ஆப்கானிஸ்தான் வெளியுறவு மந்திரி இந்தியாவுக்கு வருகை; ஜெய்சங்கர், அஜித் தோவலை சந்திக்க திட்டம்

அமீர் கான் முத்தகியின் இந்திய பயணத்திற்காக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தற்காலிக பயண நீட்டிப்புக்கான அனுமதியை வழங்கி உள்ளது.;

Update:2025-10-09 16:43 IST

புதுடெல்லி,

ஆப்கானிஸ்தான் நாட்டில் அமெரிக்கா தலைமையிலான படைகள் வாபஸ் பெற்ற பின்னர், 2021-ம் ஆண்டு தலீபான் அமைப்பு ஆட்சி அதிகாரங்களை கைப்பற்றியது. இந்நிலையில், தலீபான் அரசின் வெளியுறவு மந்திரியாக பதவி வகிக்கும் அமீர் கான் முத்தகி முதன்முறையாக இந்தியாவுக்கு 6 நாள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

இதற்காக அவர் புதுடெல்லிக்கு நேற்று புறப்பட்டார். அவருடைய இந்த பயணத்தில், மத்திய வெளிவிவகார துறை மந்திரி ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் பிற அதிகாரிகளை நேரில் சந்தித்து பேசுகிறார். இதில், அரசியல், பொருளாதார மற்றும் வர்த்தக விவகாரங்கள் பற்றி பேசப்படும் என அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட தகவல் தெரிவிக்கின்றது. தலீபான் அரசை முறைப்படி ரஷியா மட்டுமே அங்கீகரித்து உள்ளது.

இதனை தொடர்ந்து பல்வேறு நாடுகளுடனான உறவை விரிவுபடுத்துவதற்கான முயற்சியாக அவருடைய இந்த பயணம் அமையும். இந்த பயணத்தில் இருதரப்பு ஒத்துழைப்பு, வர்த்தக பரிமாற்றங்கள், உலர் பழ ஏற்றுமதிகள், சுகாதார துறை, தூதரக சேவைகள் மற்றும் பல்வேறு துறைமுகங்கள் உள்ளிட்டவை பற்றியும் ஆலோசனை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆப்கானிஸ்தானில் தலீபான் அரசை இந்தியா அங்கீகரிக்காத நிலையில், அவருடைய வருகை முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. அவருடைய இந்திய பயணத்திற்காக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தற்காலிக பயண நீட்டிப்புக்கான அனுமதியை வழங்கி உள்ளது.

அவருக்கு, மத்திய வெளிவிவகார அமைச்சகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதுபற்றி வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் கூறும்போது, இருதரப்பு உறவுகள் மற்றும் மண்டல விவகாரங்கள் பற்றி அவருடன் ஆலோசனையில் ஈடுபட ஆவலாக காத்திருக்கிறோம் என்று தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்