அஜித் பவார் மரணம்; அடையாளம் காணப்பட்ட உடல் - வெளியான சி.சி.டி.வி. காட்சியால் அதிர்ச்சி

அஜித் பவார் உயிரிழந்ததை தொடர்ந்து 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என மராட்டிய மாநில அரசு அறிவித்துள்ளது.;

Update:2026-01-28 13:39 IST

சென்னை,

மராட்டிய மாநிலம் புனே மாவட்டத்தில் நடைபெற இருந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக, அந்த மாநிலத்தின் துணை முதல்-மந்திரி அஜித் பவார் சிறிய ரக தனி விமானத்தில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் பாராமதி பகுதி அருகே தரையிறங்க முயன்றபோது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு எதிர்பாராத விதமாக விமானம் விழுந்து நொறுங்கி விபத்திற்குள்ளானது.

விபத்தில் சிக்கிய விமானம் உடனடியாக தீப்பற்றி எரியத் தொடங்கியது. இன்று காலை 8.45 மணியளவில் நடந்த இந்த கோர விபத்தில் அஜித் பவார் உள்பட, விமானத்தில் பயணித்த அவரது பாதுகாவலர்கள் 2 பேர் மற்றும் விமானிகள் 2 பேர் என மொத்தம் 5 பேர் உயிரிழந்ததாக விமானத்துறை இயக்ககம் அறிவித்துள்ளது.

இந்த விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உள்ளிட்ட அனைவரின் குடும்பத்தினருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தனது இரங்கல் செய்தியில், இந்த விமான விபத்து குறித்து முறையான விசாரணை தேவை என வலியுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில், விபத்து தொடர்பான சி.சி.டி.வி. காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விமானம் தரையில் விழுந்து நொறுங்கி வெடித்து சிதறும் காட்சி அதில் பதிவாகி உள்ளது.

இதற்கிடயில், உயிரிழந்த அஜித் பவாரின் உடல் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கைக்கடிகாரம், ஆபரணங்கள் உள்ளிட்ட பொருட்களை வைத்து உடல்கள் அடையாளம் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து நடந்த இடத்தில் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

அதே சமயம், துணை முதல்-மந்திரி அஜித் பவார் உயிரிழந்ததை தொடர்ந்து மாநிலத்தில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என மராட்டிய மாநில அரசு அறிவித்துள்ளது. இதன்படி இன்று தொடங்கி, வரும் 30-ந்தேதி வரை மாநிலம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 3 நாட்களுக்கு அரசு சார்பில் திட்டமிடப்பட்டிருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Full View
Tags:    

மேலும் செய்திகள்