விமான விபத்தில் அஜித் பவார் உயிரிழப்பு - ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்
பாராமதியில் இன்று காலை ஏற்பட்ட விமான விபத்தில் மராட்டிய துணை முதல்-மந்திரி அஜித் பவார் உயிரிழந்தார்.;
புதுடெல்லி,
மராட்டிய மாநிலம் புனே மாவட்டத்தில் நடைபெற இருந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக, அந்த மாநிலத்தின் துணை முதல்-மந்திரி அஜித் பவார் சிறிய ரக தனி விமானத்தில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் பாராமதி பகுதி அருகே தரையிறங்க முயன்றபோது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு எதிர்பாராத விதமாக விமானம் விழுந்து நொறுங்கி விபத்திற்குள்ளானது.
விபத்தில் சிக்கிய விமானம் உடனடியாக தீப்பற்றி எரியத் தொடங்கியது. இன்று காலை 8.45 மணியளவில் நடந்த இந்த கோர விபத்தில் அஜித் பவார் உள்பட, விமானத்தில் பயணித்த அவரது பாதுகாவலர்கள் 2 பேர் மற்றும் விமானிகள் 2 பேர் என மொத்தம் 5 பேர் உயிரிழந்ததாக விமானத்துறை இயக்ககம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உள்ளிட்டோரின் குடும்பத்தினருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பாராமதியில் நடந்த விமான விபத்தில் மராட்டிய மாநில துணை முதல்-மந்திரி அஜித் பவார் உள்ளிட்ட பலர் உயிரிழந்த செய்தி மிகவும் வேதனையளிக்கிறது.
அஜித் பவாரின் அகால மரணம் ஈடுசெய்ய முடியாத இழப்பு. மராட்டிய மாநிலத்தின் வளர்ச்சிக்கு, குறிப்பாக கூட்டுறவுத் துறையில் அவர் ஆற்றிய சிறப்பான பங்களிப்பிற்காக அவர் எப்போதும் நினைவுகூரப்படுவார். அவரது குடும்பத்தினர், ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விபத்தில் உயிரிழந்த மற்ற அனைவரின் குடும்பங்களுக்கும் இந்த துயரத்தை தாங்கும் வலிமையை கடவுள் வழங்கட்டும்” என்று பதிவிட்டுள்ளார்.
இதே போல், பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “மராட்டிய மாநிலம் பாராமதியில் நடந்த விமான விபத்து வேதனையளிக்கிறது. விபத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வலிமையையும், தைரியத்தையும் வழங்க கடவுளிடம் பிரார்த்திக்கிறேன்.
அஜித் பவார் மக்கள் தலைவராக இருந்தார். கட்சியின் அடிமட்டம் வரை வலுவான தொடர்பை கொண்டிருந்தார். கடின உழைப்பாளியாகவும், மராட்டிய மக்களுக்கு சேவை செய்வதில் முன்னணியில் இருந்த ஆளுமையாகவும் அவர் மதிக்கப்பட்டார்.
நிர்வாக விஷயங்களைப் பற்றிய அவரது புரிதலும், ஏழைகள் மற்றும் நலிந்தவர்களுக்கு அதிகாரம் அளிப்பதில் அவர் காட்டிய ஆர்வமும் குறிப்பிடத்தக்கது. அவரது அகால மறைவு மிகவும் அதிர்ச்சியையும், வருத்தத்தையும் அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும் எண்ணற்ற தொண்டர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல். ஓம் சாந்தி” என்று பதிவிட்டுள்ளார்.