அம்பேத்கர் பெயர் விடுபட்டது தற்செயலானது: மராட்டிய மந்திரி கிரிஷ் மகாஜன் விளக்கம்
குடியரசுதின உரையில் அம்பேத்கர் பெயரை தவிர்த்த மராட்டிய மாநில பா.ஜ.க. மந்திரி கிரிஷ் மகாஜனை கண்டித்து வனத்துறை பெண் அதிகாரி மாதவி ஜாதவ் குரல் எழுப்பினார்.;
மும்பை,
மராட்டிய மாநில ஊரக வளர்ச்சி மந்திரியும் பா.ஜ.க. மூத்த தலைவருமான கிரிஷ் மகாஜன், குடியரசு தின உரையில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரை குறிப்பிடாமல் தவிர்த்துவிட்டதால், வனத்துறை பெண் அதிகாரி மாதவி ஜாதவ் நிகழ்விடத்திலேயே குரல் எழுப்பினார்.
"இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடாத இந்துத்துத்துவ தலைவர்களின் பெயர்களைக் குறிப்பிட்ட மந்திரி கிரிஷ் மகாஜன், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை எழுதி அனைவருக்கும் அதிகாரம் அளித்த அம்பேத்கர் பெயரை குறிப்பிடாதது திட்டமிட்ட தவிர்ப்பு. என்னை பணி இடைநீக்கம் செய்தாலும் எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன். ஆனால் டாக்டர் அம்பேத்கர் சாஹேப்பை அவமதிப்பதை நான் பொறுத்துக்கொள்ள மாட்டேன்" என்று மாதவி ஜாதவ் சப்தமாக பேசினார்.
இந்த விவகாரம் பற்றி அறிந்த பிரகாஷ் அம்பேத்கர் செல்போன் மூலம் பெண் அதிகாரி மாதவி ஜாதவிடம் பேசினார். "குடியரசு தினத்தன்று அம்பேத்கரை வேண்டுமென்றே அவமதித்த பா.ஜ.க. மந்திரி கிரிஷ் மகாஜன் மீது வன்கொடுமை வழக்குப்பதிவு செய்ய சட்ட ஆலோசனையை நாடுகிறேன். விரைவில் வழக்குத் தாக்கல் செய்வேன்" என்று உறுதியளித்தார்.
குடியரசு தின நிகழ்வில் பார்வையாளர் மத்தியில் அமர்ந்திருந்த பெண் அதிகாரி மாதவி ஜாதவ் அமைச்சரை நோக்கி "நீங்கள் ஏன் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் பெயரை குறிப்பிவில்லை?" குரல் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்த காட்சி ஊடகங்களில் வைரலானது.
இந்த சர்ச்சைக்கு பதிலளித்த மராட்டிய மாநில ஊரக வளர்ச்சி மந்திரி கிரிஷ் மகாஜன், "எனது பேச்சில் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் பெயர் விடுபட்டது கவனக்குறைவாக நடந்தது; வேண்டுமென்றே தவிர்க்கவில்லை. எந்த உள்நோக்கமும் இல்லை" என்று வருத்தம் தெரிவித்தார்.