கேரளாவில் ஓடும் பஸ் திடீரென தீப்பிடித்து எரிந்தது; அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்

டிரைவர், கண்டக்டர் உடனே சுதாரித்துக்கொண்டு பஸ்சில் இருந்த பயணிகளுக்கு தகவல் தெரிவித்து அவர்களை வெளியேற்றினர்.;

Update:2025-08-11 07:03 IST

மலப்புரம்,

கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து கோழிக்கோடு நோக்கி நேற்று காலை பயணிகளுடன் தனியார் பஸ் ஒன்று சென்றது. காலை 8.30 மணியளவில் மலப்புரம் மாவட்டம் கொண்டோட்டி அருகே விமான நிலைய சந்திப்பு பகுதி துரக்கல் என்ற இடத்தில் வந்தபோது திடீரென்று பஸ்சின் முன்புறம் கரும்புகை எழுந்தது. இதைபார்த்த டிரைவர், பஸ்சை உடனே நிறுத்தி கண்டக்டருடன் வெளியே வந்து பார்த்தார்.

இ்ந்த சமயத்தில் பஸ் திடீரென்று தீப்பிடித்து எரிய தொடங்கியது. டிரைவர், கண்டக்டர் உடனே சுதாரித்துக்கொண்டு பஸ்சில் இருந்த பயணிகளுக்கு தகவல் தெரிவித்து அவர்களை வெளியேற்றினர். இதைத்தொடர்ந்து பஸ் முழுவதும் தீபரவி மளமளவென கொழுந்துவிட்டு எரிந்தது.

இதற்கிடையே தகவல் அறிந்த கொண்டோட்டி போலீசாரும், தீயணைப்பு படையினரும் விரைந்து வந்து பஸ்சில் எரிந்த தீயை அணைக்க முயன்றனர். அதன்படி சுமார் ஒரு மணி நேரம் போராடி தீ அணைக்கப்பட்டது. ஆனாலும் பஸ் முழுவதும் தீயில் எரிந்து கருகி எலும்புக்கூடாக காட்சியளித்தது. டிரைவரும், கண்டக்டரும் பயணிகளை உடனே வெளியேற்றியதால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

தொடர்ந்து அவர்கள் வேறு பஸ்சில் தங்களது ஊர்களுக்கு சென்றனர். பஸ்சில் மின்கசிவு ஏற்பட்டு தீப்பிடித்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஓடும் பஸ் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்