பி.ஆர்.எஸ். கட்சியில் இருந்து சந்திரசேகர ராவ் மகள் கவிதா விலகல்

பி.ஆர்.எஸ். கட்சியில் இருந்து கவிதா நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார்.;

Update:2025-09-03 13:41 IST

ஐதராபாத்,

பாரதிய ராஷ்ட்ரிய சமிதி கட்சியின்(பி.ஆர்.எஸ்.) தலைவரும், தெலுங்கானா முன்னாள் முதல்-மந்திரியுமான சந்திரசேகர ராவின் மகனான கே.டி. ராமராவ் மற்றும் மகள் கவிதா இடையே மோதல் நீடித்த நிலையில், கட்சியில் இருந்து கவிதா நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பி.ஆர்.எஸ். கட்சியை அழிக்கும் வகையில் சிலர் செயல்படுவதாக தமது அண்ணன் மீது கவிதா அண்மையில் குற்றம் சாட்டியிருந்தார்.

முன்னதாக டெல்லி ஆம் ஆத்மி அரசின் மதுபான ஊழல் வழக்கில், கவிதா கைது செய்யப்பட்டார். பி.ஆர்.எஸ். கட்சியின் தலைவர் சந்திரசேகர ராவும் வீட்டில் வழுக்கி விழுந்ததால் உடல் நலம் குன்றினார். கட்சி இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டது. இந்த சூழ்நிலையில் கட்சியின் செயல் தலைவராக இருந்த கே.டி.ராமராவ், தலைமைப்பதவியை குறிவைத்து காய் நகர்த்த தொடங்கினார்.

இதையறிந்த கவிதா, ஜாமினில் வெளியே வந்ததும் கட்சிக்குள் நடக்கும் விவகாரம் குறித்து தனது தந்தைக்கு கடிதம் எழுதினார். ஆனால் சந்திரசேகர ராவ், தனது மகன் பக்கமே நின்றார். கட்சியின் பல நிர்வாகிகள் ராமாராவ் கட்டுப்பாட்டுக்குள் வந்தனர். கட்சியின் தலைமைப் பொறுப்பை ராமாராவுக்கு கொடுக்கக்கூடாது என்று கவிதா பகிரங்கமாகவே தெரிவித்தார்.

பனிப்போராக இருந்து வந்த மோதல், ஒரு கட்டத்தில் வெடித்தது. ஆட்சியில் இல்லாத நேரத்தில் இதுபோன்ற வாரிசுப் போட்டி கட்சியை பலவீனமாக்கும் என மூத்த தலைவர்கள் அறிவுறுத்தினர். ஆனாலும் இரு தரப்பினரும் தங்களது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தனர்.

வாரிசுப்போட்டியின் உச்சபட்சமாக, தனது மகளான கவிதாவை, கட்சியில் இருந்து சந்திரசேகர ராவ் சஸ்பெண்ட் செய்தார். இதனை அக்கட்சியின் பொதுச்செயலாளர்களான டி.ரவீந்தர் ராவ், சோமா பாரத் குமார் ஆகியோர் நேற்று வெளிட்ட அறிக்கையில் தெரிவித்தனர். அந்த அறிக்கையில், கவிதாவின் சமீபத்திய நடத்தை மற்றும் அவரது கட்சி விரோத நடவடிக்கைகள் கட்சியை பெரிதும் பாதித்துள்ளது. இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், பி.ஆர்.எஸ். கட்சியில் இருந்து விலகுவதாக கவிதா இன்று அறிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கவிதா, “எனக்கு பதவிகள் மீது பேராசை இல்லை. நான் பி.ஆர்.எஸ். கட்சியில் இருந்து ராஜினாமா செய்கிறேன். சட்டமன்ற சபாநாயகரிடம் எனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளேன்.

சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு நான் பல்வேறு திட்டங்களில் பணியாற்றினேன். பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடுகளுக்காகவும், தெலுங்கானாவில் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான பிற போராட்டங்களிலும் பி.ஆர்.எஸ் கொடியை ஏந்தியபடி பங்கேற்றேன். இவை எப்படி 'கட்சி விரோத' செயல்களாக மாறும் என்பது எனக்கு புரியவில்லை” என்று தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்