காங்கிரஸ் நிகழ்ச்சியில் டி.கே., டி.கே. என கோஷம்... ஆத்திரமடைந்த சித்தராமையா: வைரலான வீடியோ

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் கூட இளைஞர் காங்கிரசாரை அமைதியாக இருக்க வேண்டும் என எச்சரித்தனர்.;

Update:2026-01-27 21:15 IST

பெங்களூரு,

கர்நாடகாவில் 2023-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தபோது, முதல்-மந்திரி அதிகார பகிர்வு தொடர்பான தகவல் வெளியானது. இதன்படி, இரண்டரை வருட காலம் சித்தராமையாவும், மற்றொரு இரண்டரை வருட காலத்தில் டி.கே. சிவக்குமாரும் முதல்-மந்திரி பதவியை வகிப்பார்கள் என தகவல் கசிந்தது. ஆனால், கட்சியின் தலைமையிடம் இருந்து இதுபற்றி அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளிவரவில்லை.

எனினும், தலைமைத்துவம் தொடர்பான பூசல் கட்சிக்குள் புகைந்து கொண்டே இருந்தது. இந்நிலையில், 2025-ம் ஆண்டு நவம்பரில் இந்த ஆட்சியின் முதல் இரண்டரை வருட காலம் நிறைவடைந்தது. இதனால், முதல்-மந்திரி மாற்றம் செய்யப்படுவார் என யூகங்கள் கிளம்பின. எனினும், சித்தராமையாவே முதல்-மந்திரியாக தொடர்ந்து நீடித்து வருகிறார்.

இந்த சூழலில், காங்கிரஸ் கட்சியின் நிகழ்ச்சி ஒன்று இன்று நடந்தது. அப்போது டி.கே. சிவக்குமாரை குறிப்பிடும் வகையில் கூட்டத்தில் இருந்த தொண்டர்கள் டி.கே., டி.கே. என கோஷம் எழுப்பியபடி இருந்தனர்.

அப்போது மேடையில் பேச எழுந்து சென்றிருந்த சித்தராமையா, அவர்களை பார்த்து சற்று நேரம் பேசாமல் நின்றார். எனினும், அவர்கள் தொடர்ந்து கோஷம் எழுப்பவும் ஆத்திரமடைந்த அவர், கையை அசைத்து அவர்களை அமைதியாக இருக்கும்படி கூறினார்.

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் கூட இளைஞர் காங்கிரசாரை அமைதியாக இருக்க வேண்டும் என்றும் இல்லையெனில் கடும் விளைவுகள் ஏற்படும் என அச்சுறுத்தல் விடுத்த காட்சிகளும் பதிவாகி இருந்தன. இதுதொடர்பான வீடியோ ஒன்றும் வைரலாகி வருகிறது. கர்நாடகாவில் தற்போது, முதல்-மந்திரியாக சித்தராமையாவும், துணை முதல்-மந்திரியாக டி.கே. சிவக்குமாரும் பதவி வகித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்