இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் இடையேயான ‘அனைத்து ஒப்பந்தங்களின் தாய்’ வர்த்தக ஒப்பந்தம் முடிவானது

இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆனது, உலகளவில் காணப்படும் சீர்குலைவுக்கு மாற்றாக நிலைத்தன்மையை கொண்டு வரும் என பிரதமர் மோடி கூறினார்.;

Update:2026-01-27 14:40 IST

புதுடெல்லி,

இந்தியாவுக்கு வருகை தந்துள்ள ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் அன்டோனியோ கோஸ்டா மற்றும் ஐரோப்பிய ஆணையாளர் ஊர்சுலா வான்டர் லெயன் ஆகிய இருவருக்கும் டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில், பிரதமர் மோடி இன்று விருந்து அளித்து கவுரவப்படுத்தினார்.

இந்நிலையில் டெல்லியில், இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் தங்களுடைய குழுவினருடன் இன்று மதியம் ஆலோசனையில் ஈடுபட்டனர். இதில், இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இடையே வெளிப்படையான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான ஆலோசனை முக்கிய இடம் பெற்றது.

அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக ஐரோப்பிய ஒன்றியம், இந்தியாவின் இரண்டாவது பெரிய வர்த்தக கூட்டாளியாக உள்ளது. வர்த்தக ஒப்பந்தங்கள், முதலீடு மற்றும் கூட்டாண்மை ஆகியவற்றில் நமது நட்பு மற்றும் நம்பிக்கையை விரிவுபடுத்தும் நோக்கில் இந்த ஒப்பந்தம் அமையும்.

இந்த நிலையில், அனைத்து ஒப்பந்தங்களின் தாய் என பெயரிடப்பட்ட, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, வெளிப்படையான வர்த்தக ஒப்பந்தம் இன்று இறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனை இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் கூட்டாக இணைந்து இன்று அறிவித்து உள்ளது.

இதுபற்றி பிரதமர் மோடி குறிப்பிடும்போது, இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆனது, உலகளவில் காணப்படும் சீர்குலைவுக்கு மாற்றாக நிலைத்தன்மையை கொண்டு வரும் என கூறினார்.

இந்த சந்திப்பின்போது, ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர்கள் இருவரும், இந்திய குடியரசு தின கொண்டாட்டத்தின்போது, தங்களுக்கு இந்தியா வழங்கிய உபசரணை மற்றும் பன்முக தன்மை ஆகியவற்றை பாராட்டினார்கள்.

இந்திய குடியரசு தின கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக அவர்கள் இருவரும் சிறப்பு விருந்தினர்களாக டெல்லி வந்தபோது, ராணுவ அணிவகுப்புடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதன்பின்னர், நாட்டின் 77-வது குடியரசு தினம் டெல்லி கடமை பாதையில் நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஒற்றுமை, சமத்துவம் மற்றும் கலாசார பாரம்பரிய செறிவை கவுரவிக்கும் வகையில் நடந்த இந்த கொண்டாட்டத்தில் பங்கேற்க, 10 ஆயிரம் சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு விடப்பட்டு இருந்தது. விமான சாகசங்கள், ராணுவ அணிவகுப்பு, அலங்கார ஊர்திகள் என குடியரசு தின கொண்டாட்டம் களை கட்டியது.

போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு விரிவான கண்காணிப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு இருந்தன. குடியரசு தினத்தில் ராணுவம், கடற்படை மற்றும் விமான படை என முப்படைகளின் அணிவகுப்பு ஆகியவற்றுடன் பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்திகள், பல்வேறு துறைகளை சேர்ந்த அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பும் இடம்பெற்றன.

இதனை ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் அன்டோனியோ கோஸ்டா மற்றும் ஐரோப்பிய ஆணையாளர் ஊர்சுலா வான்டர் லெயன் உள்ளிட்டோரும் கண்டுகளித்தனர். இதேபோன்று வந்தே மாதரம் தேசிய பாடலின் 150-ம் ஆண்டு கால கொண்டாட்டமும் நேற்று சிறப்பாக நடைபெற்றது. இந்திய குடியரசு தினத்தில் உலக தலைவர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்