கர்நாடகா: கவர்னர் மாளிகை நோக்கி பேரணியாக சென்ற சித்தராமையா, டி.கே. சிவக்குமார் கைது
பஞ்சாயத்துகளின் பங்கு கடுமையாக குறைக்கப்பட்டு உள்ளது என முதல்-மந்திரி சித்தராமையா குற்றச்சாட்டாக கூறினார்.;
பெங்களூரு,
கர்நாடகாவில் கவர்னர் மாளிகையை நோக்கி செல்வோம் என்ற பெயரில் முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி டி.கே. சிவக்குமார் மற்றும் காங்கிரஸ் பொது செயலாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, கட்சியின் பிற உறுப்பினர்கள் மற்றும் எம்.பி.க்கள் திரண்டு பேரணியாக புறப்பட்டு சென்றனர்.
மத்திய அரசு, ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு பதிலாக வி.பி.-ஜி ராம் ஜி என்ற புதிய திட்டத்தினை அறிமுகம் செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அவர்கள் பேரணியாக சென்று இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களை கவர்னர் மாளிகை அருகே போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர். எனினும், அவர்கள் தொடர்ந்து முன்னேற முயன்றனர். இதனால், போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அவர்களை கலந்து செல்லும்படி போலீசார் கூறினர்.
ஆனால், அவர்கள் தொடர்ந்து பேரணியாக செல்ல முயன்றதும் போலீசார் அவர்களை கைது செய்து போலீஸ் வாகனத்தில் ஏற்றினர். இதனால், அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
அந்த சம்பவம் நடப்பதற்கு முன் போராட்டக்காரர்கள் முன்னிலையில் பேசிய சித்தராமையா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசின்போது, ஊரக வேலைவாய்ப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதனை மத்திய அரசு அழிக்க முயற்சிக்கிறது.
இந்த வி.பி.-ஜி ராம் ஜி திட்டத்தில் உள்ள ராம், தசரத ராமரோ அல்லது சீதா ராமரோ அல்ல. அது ரோஜ்கார் மற்றும் ஆஜீவிகா இயக்கத்தின் வளர்ச்சியடைந்த பாரதத்திற்கான உத்தரவாதம் (கிராமின்) என்பதே ஆகும் என்றார்.
இதற்கு முன்னர் என்ன வேலை செய்ய வேண்டும் என பஞ்சாயத்துகள் முடிவு செய்யும். ஆனால், பஞ்சாயத்துகளின் பங்கு கடுமையாக குறைக்கப்பட்டு உள்ளது என அவர் குற்றச்சாட்டாக கூறினார்.