இந்தியாவும், மொரீஷியஸும் அந்தந்த நாடுகளின் கரன்சியை கொண்டு வர்த்தகம் - பிரதமர் மோடி
சாகோஸ் ஒப்பந்தம் முடிவடைந்ததற்காக ராம்கூலம் மற்றும் மொரிஷியஸ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.;
புதுடெல்லி,
மொரீசியஸ் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் கடந்த 9ம் தேதி முதல் 16ம் தேதி வரை அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். இவர் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் பிரதமர் மோடியை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
இதற்காக உத்தரபிரதேசம் வந்த பிரதமர் மோடியை கவர்னர் அனந்திபென் படேல் மற்றும் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் வரவேற்றனர். பின்னர், வாரணாசிக்கு கார் மூலம் சென்ற பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இரு தலைவர்களையும் வரவேற்கும் விதமாக, வாரணாசி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. முக்கிய பகுதிகள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், பிரதமர் மோடியை மொரீசியஸ் நாட்டு பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் சந்தித்து பேசினார். இரு நாடுகளின் உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இருதரப்பு சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பிரதமர் மோடி பேசியதாவது:-
எனது மக்களவை தொகுதியில் உங்களை வரவேற்பதில் பெருமைப்படுகிறேன். பல நூற்றாண்டுகளாக, இந்தியாவின் நாகரிகம் மற்றும் கலாசாரத்தின் அடையாளமாக காசி இருந்து வருகிறது. நமது மரபுகள் மற்றும் மதிப்புகள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே மொரிஷியஸை அடைந்து அதன் வாழ்க்கை முறையில் ஆழமாக வேரூன்றியுள்ளன.
நமக்கும் மொரீஷியஸ் நாட்டுக்கும் இருப்பது உணர்ச்சிபூர்வமான பிணைப்பு. நம் இரு நாடுகளும் வெறும் நட்பு நாடுகள் மட்டும் அல்ல, இரு நாடுகளும் ஒரு குடும்பம் என்று நான் பெருமையுடன் கூறுகிறேன். மொரீஷியஸின் வளர்ச்சியில் இந்தியா நம்பகமான மற்றும் முன்னுரிமை கொண்ட பங்குதாரராக இருப்பது பெருமைக்குரிய விஷயம்.
இந்தியா எப்போதும் காலனித்துவ நீக்கத்தையும் மொரீஷியஸின் இறையாண்மையை முழுமையாக அங்கீகரிப்பதையும் ஆதரித்துள்ளது.மேலும் இந்த விஷயத்தில் மொரீஷியஸுடன் நாங்கள் தொடர்ந்து உறுதியாக நிற்கிறோம். இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை, அந்தந்த நாட்டு கரன்சியில் மேற்கொள்வது பற்றி விவாதித்து முடிவு செய்யப்படும் என்று கூறினார்.
இந்தியா வந்துள்ள ராம்கூலம் அயோத்தி மற்றும் திருப்பதிக்கு செல்ல உள்ளார். பிரதமர் மோடி மார்ச் மாதம் மொரீஷியஸுக்கு பயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.