‘இந்தியாவிற்கு மேலும் 30 ஆயிரம் விமானிகள் தேவை’ - மத்திய மந்திரி ராம் மோகன் நாயுடு
1,700 விமானங்களுக்கான ஆர்டர்களை இந்திய விமான நிறுவனங்கள் ஏற்கனவே வழங்கியிருப்பதாக ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.;
அமராவதி,
ஆந்திர மாநிலம் அமராவதியில் நடைபெற்ற இந்திய தொழில்துறை கூட்டமைப்பு மாநாட்டில் மத்திய விமான போக்குவரத்துத் துறை மந்திரி ராம் மோகன் நாயுடு கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
“அமெரிக்காவில் பிரத்யேக விமான நிலையத்தைக் கொண்ட உலகளாவிய தளவாட நிறுவனமான பெடெக்ஸ் நிறுவனத்தைப் போலவே, இந்தியாவில் சரக்கு விமான நிலையங்களை உருவாக்குவது குறித்தும் மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. போயிங் மற்றும் ஏர்பஸ் போன்ற தயாரிப்பு நிறுவனங்களிடம் 1,700 விமானங்களுக்கான ஆர்டர்களை இந்திய விமான நிறுவனங்கள் ஏற்கனவே வழங்கியுள்ளன.
ஒரு விமானத்தை சரியான அட்டவணையில் இயக்க, ஒவ்வொரு விமானத்திற்கும் குறைந்தது 10 முதல் 15 விமானிகள் தேவைப்படுவார்கள். எனவே, 1,700 விமானங்களுக்கு சுமார் 25,000 முதல் 30,000 விமானிகள் தேவைப்படுவார்கள். மேலும், தற்போதுள்ள பயிற்சி நிறுவனங்கள் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே விமானிகளை தயார் செய்வதால், நமது தேவையைப் பூர்த்தி செய்ய அதிக பறக்கும் பயிற்சி நிறுவனங்கள் (FTO) உருவாக்கப்பட வேண்டும்.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.