பீகாரில் மோசமான தோல்வியை சந்தித்த காங்கிரஸ்.. ராகுலின் ‘வாக்கு திருட்டு’ குற்றச்சாட்டு என்னவானது..?
பீகார் தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு பெருத்த அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் கொடுத்து இருக்கிறது.;
கோப்புப்படம்
புதுடெல்லி,
பீகார் தேர்தலுக்கு காங்கிரஸ் கட்சி அதிக முக்கியத்துவம் கொடுத்திருந்தது. குறிப்பாக, மாநிலத்தில் நடத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை கடுமையாக எதிர்த்த அந்த கட்சி, இதற்கு எதிராக ராகுல் காந்தி தலைமையில் அங்கே வாக்காளர் உரிமை யாத்திரையும் நடத்தியது. அத்துடன் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் அரியானா சட்டசபை தேர்தல்களில் ‘வாக்குத்திருட்டு’ நடந்ததை ராகுல் காந்தி தரவுகளுடன் வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தார்.
இந்த போராட்டங்கள் பீகார் சட்டசபை தேர்தலில் கட்சிக்கு பெரும் உத்வேகத்தை ஏற்படுத்தும் என காங்கிரஸ் கருதியது. எனவேதான் ராஷ்டிரீய ஜனதாதளத்துடன் தொகுதிப்பங்கீட்டிலும் கடுமை காட்டியது. ஆனால் தேர்தல் முடிவுகள் அந்த கட்சிக்கு பெருத்த அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் கொடுத்து இருக்கிறது. மாநிலத்தில் 50 தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்ட தேர்தல்களில் 2-வது மோசமான செயல்பாடாக இந்த தேர்தல் அமைந்திருக்கிறது.
61 இடங்களில் போட்டியிட்ட அந்த கட்சி வெறும் 6 தொகுதிகளையே கைப்பற்ற முடிந்தது. அத்துடன் பல தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்.
முன்னதாக கடந்த 2010-ம் ஆண்டு வெறும் 4 தொகுதிகளில் வென்றிருந்ததே அந்த கட்சியின் மோசமான தேர்தலாக அமைந்து இருந்தது. இதன் மூலம் ராகுல் காந்தியின் வாக்கு திருட்டு குற்றச்சாட்டு, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்துக்கு எதிர்ப்பு போன்றவை பீகார் மக்களிடம் எடுபடாமலேயே போயிருப்பது தெரியவந்துள்ளது.
தோல்விக்கு என்ன காரணம்..?
பீகாரின் பிரச்சினைகளான வேலைவாய்ப்பின்மை, இடம்பெயர்வு மற்றும் ஆட்சிக்கு எதிரான அதிருப்தி ஆகியவற்றில் கவனம் செலுத்துவதை விட, மத்திய அரசுக்கு எதிரான வாக்கு திருட்டு போன்ற தேசியப் பிரச்சினைகளில் காங்கிரஸ் கட்சி அதிக கவனம் செலுத்தியது.
ராகுல் காந்தியின் வாக்காளர் உரிமை யாத்திரை போன்ற பரப்புரைகளுக்கு லட்சக்கணக்கான மக்கள் திரண்டாலும், இதனை உண்மையான வாக்குகளாக மாற்ற அக்கட்சிக்குச் சக்திவாய்ந்த களப் பணியாளர்கள் இல்லாமல் போய்விட்டது. இந்தத் தேசியப் பிரச்சினைகள் பீகாரின் கிராமப்புற வாக்காளர்களிடம் எடுபடவில்லை என்று அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
மேலும், மகாகத்பந்தன் (இண்டியா) கூட்டணி வெளிப்படையாக ஒற்றுமையைக் காட்டினாலும், வேட்பாளர் தேர்வின் போது கூட்டணிக் கட்சிகளிடையே இணக்கமின்மை நிலவியது. குறிப்பாக, காங்கிரஸ் மற்றும் ஆர்.ஜே.டி. என இரண்டு கட்சிகளும் சில தொகுதிகளில் வேட்பாளர்களைக் களம் இறக்கின. இது கூட்டணியின் வாக்குகளைப் பிரித்து, ஒட்டுமொத்தமாக தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றிக்கு சாதகமாக அமைந்தது.
காங்கிரஸ் கட்சிக்கு பீகாரில் ஒரு வலுவான, மக்கள் செல்வாக்குள்ள மாநிலத் தலைவர் இல்லாதது தொடர்ந்து பெரிய பலவீனமாகவே இருந்து வருகிறது. தேர்தலை வழிநடத்த ஒரு ஆற்றல்மிக்க முகம் இல்லாதது, கட்சியின் வாக்கு சேகரிப்புத் திறனை பெருமளவு குறைத்ததாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.