பீகார் சட்டசபை தேர்தல்: தே.ஜ. கூட்டணி இமாலய வெற்றி.. பா.ஜ.க.வுக்கு முதல்-மந்திரி பதவி?

பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அசுர பலத்துடன் காங்கிரஸ் கூட்டணியை வீழ்த்தி ஆட்சியை தக்கவைத்தது.;

Update:2025-11-15 07:28 IST

பாட்னா,

பீகாரில் சட்டசபை தேர்தல் கடந்த மாதம் 6-ந்தேதி அறிவிக்கப்பட்டது. அத்துடன் தேர்தல் திருவிழா களைகட்டியது. ஆனால் பல மாதங்களுக்கு முன்னரே பீகார் தேர்தல் நாடு முழுவதும் கவனிக்கும் ஒரு நிகழ்வாக மாறி இருந்தது. இதற்கு பிரதான காரணமாக அமைந்தது, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்.

தேர்தல் கமிஷனின் இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் இந்த எதிர்ப்பையும் மீறி வாக்காளர் பட்டியலில் சிறப்பு திருத்தம் செய்து இறுதிப்பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் 68 லட்சத்துக்கு அதிகமான பெயர்கள் நீக்கப்பட்டு இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த சலசலப்புக்கு மத்தியில் தேர்தல் அறிவிக்கப்பட்டதும், பீகார் தேர்தல் களம் சூடுபிடித்தது.

Advertising
Advertising

பா.ஜ.க. - தேசிய ஜனநாயக கூட்டணி

மாநிலத்தில் ஆட்சியை தக்கவைக்க பா.ஜனதா மற்றும் ஐக்கிய ஜனதாதளம் இணைந்த தேசிய ஜனநாயக கூட்டணி தீவிரமாக களத்தில் இறங்கியது. கூட்டணியின் பிரதான கட்சிகளாக பா.ஜனதாவும், ஐக்கிய ஜனதாதளமும் மொத்தமுள்ள 243 இடங்களில் தலா 101 இடங்களில் போட்டியிடுவது என முடிவு செய்தன.

சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்) கட்சிக்கு 29 இடங்கள் வழங்கப்பட்டன. இதைத்தவிர இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா, ராஷ்டிரிய லோக் மோர்ச்சா கட்சிகளுக்கு தலா 6 இடங்கள் என தொகுதிப்பங்கீட்டை இறுதி செய்தன. அத்துடன் மாநிலத்தில் சூறாவளி பிரசாரத்தை தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் முன்னெடுத்தனர்.

முதல்-மந்திரி நிதிஷ் குமார், துணை முதல்-மந்திரி சாம்ராட் சவுத்ரி உள்ளிட்ட மாநில தலைவர்களும், பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள், மாநில பா.ஜனதா முதல்-மந்திரிகள் என தேசிய தலைவர்களும் தீவிர பிரசாரத்தை மேற்கொணடனர்.

இந்தியா கூட்டணி

மறுபுறம் ராஷ்டிரீய ஜனதாதளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை கொண்ட மெகா கூட்டணியும் (இந்தியா கூட்டணி) பீகாரில் மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமர பகீரத பிரயத்தனம் செய்தது. இந்த கூட்டணியின் பிரதான கட்சிகளான காங்கிரஸ், ராஷ்டிரீய ஜனதாதளம் இடையே முதலில் இருந்த இணக்கம், தொகுதிப்பங்கீட்டில் எதிரொலிக்கவில்லை. இதனால் இரு கட்சிகளும் தன்னிச்சையாக தொகுதிகளை பங்கிட்டுக்கொண்டன.

அதன்படி ராஷ்டிரீய ஜனதாதளம் 143 இடங்களிலும், காங்கிரஸ் 61 தொகுதிகளிலும் களமிறங்கின. இந்த கூட்டணியில் இடம்பெற்ற பிற கட்சிகளான மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு 20, விகாஷீல் இன்சான் கட்சி 12, இந்திய கம்யூனிஸ்டு 9, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு 4 உள்ளிட்ட பிற கட்சிகளும் போட்டியிட்டன. தொகுதிப்பங்கீட்டில் ஏற்பட்ட இழுபறிகளால் மெகா கூட்டணி கட்சிகள் பல தொகுதிகளில் தங்களுக்குள்ளே நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் நிலையும் உருவானது.

தொகுதிப்பங்கீட்டில் சிக்கல் ஏற்பட்டிருந்தாலும், மெகா கூட்டணியும் பீகார் தேர்தல் களத்தில் ஒருங்கிணைந்த பிரசாரத்தை மேற்கொண்டன. இந்த கூட்டணியின் முதல்-மந்திரி வேட்பாளரான தேஜஸ்வி யாதவ் மாநிலம் முழுவதும் சூறாவளியாக சுற்றி வந்து வாக்கு சேகரித்தார். அவருக்கு ஆதரவாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர்களான ராகுல், பிரியங்கா மற்றும் காங்கிரஸ் முதல்-மந்திரிகளும் பீகாரில் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர்.

பிரசாந்த் கிஷோரின் ஜன சுராஜ் கட்சி

இந்த கூட்டணிகளை தவிர பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரின் புதிய கட்சியான ஜன சுராஜ் கட்சி 238 தொகுதிகளில் போட்டியிட்டது. மேலும், ஓவைசியின் மஜ்லிஸ் கட்சி (25 இடங்கள்), ஆம் ஆத்மி (121 தொகுதிகள்) உள்ளிட்ட கட்சிகளும் பீகார் தேர்தல் களத்தை பரபரப்பாக்கின.

வாக்குப்பதிவு

சுமார் ஒன்றரை மாதங்களாக பீகார் தேர்தல் களம் அனல் பறந்த நிலையில், மொத்தமுள்ள 243 தொகுதிகளுக்கு கடந்த 6 மற்றும் 11-ந்தேதிகளில் 2 கட்டமாக வாக்குப்பதிவு நடந்தது. இந்த தேர்தலில் வரலாறு காணாத வாக்குப்பதிவு இருந்தது. ஒட்டுமொத்தமாக 66.91 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. இது மாநில தேர்தல் வரலாற்றில் முதல் முறையாகும். இது தேர்தல் முடிவுகள் மீது பெரும் எதிர்பார்ப்பையும் உருவாக்கி விட்டது.

குறிப்பாக வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்துடன் நடத்தப்பட்ட தேர்தல் என்பது உள்ளிட்ட பல்வேறு சிறப்புகளுடன் நடைபெற்ற இந்த தேர்தல் பீகாரையும் தாண்டி நாடு முழுவதும் பெரும் ஆவலை ஏற்படுத்தி இருந்தன.

வாக்கு எண்ணிக்கை

இந்த தேர்தலில் பா.ஜனதா கூட்டணி 160 இடங்கள் வரை பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் என பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் தெரிவித்தன. இது தேசிய ஜனநாயக கூட்டணியினருக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதேநேரம் இந்த கருத்துக்கணிப்புகளை நிராகரித்த தேஜஸ்வி யாதவ், தங்கள் கூட்டணி மாநிலத்தில் ஆட்சியை பிடிக்கும் என நம்பிக்கை தெரிவித்து இருந்தார்.

இவ்வாறு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தேர்தல் திருவிழாவின் உச்சக்கட்ட நிகழ்வான வாக்கு எண்ணிக்கை நேற்று காலையில் தொடங்கியது. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளை உண்மையாக்கும் வகையில், தொடக்கம் முதலே ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பாலான இடங்களில் முன்னிலை வகித்தது.

மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க 122 இடங்கள் தேவை என்ற நிலையில், 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் முன்னிலை வகித்தனர். இந்த முன்னிலை இறுதி வரை நீடித்தது.

தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பா.ஜ.க.

இறுதியில் மொத்தமுள்ள 243 இடங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி 202 இடங்களை கைப்பற்றி சரித்திர வெற்றி பெற்றது. இதன் மூலம் மாநிலத்தில் மீண்டும் ஆட்சியை தக்கவைத்துள்ளது. கூட்டணியில் பா.ஜனதா கட்சி 89 இடங்களை கைப்பற்றி மாநிலத்தில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து உள்ளது. ஐக்கிய ஜனதாதளம் 85, லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) 19, இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா 5, ராஷ்டிரீய லோக் மோர்ச்சா 4 இடங்களை கைப்பற்றி இருந்தன. பீகார் துணை முதல்-மந்திரி சாம்ராட் சவுத்ரி மற்றும் நிதிஷ்குமார் அரசில் இடம்பெற்றிருந்த பெரும்பாலான மந்திரிகளும் வெற்றி பெற்றனர்.

தேஜஸ்வி யாதவ் வெற்றி

மறுபுறம் ராஷ்டிரீய ஜனதாதளம், காங்கிரஸ் இணைந்த மெகா கூட்டணிக்கு வெறும் 35 இடங்கள் மட்டுமே கிடைத்தது. இதில் ராஷ்டிரீய ஜனதாதளம் 25 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. கடந்த தேர்தலில் 75 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்ற ராஷ்டிரீய ஜனதாதளம் இந்த தேர்தலில் படுதோல்வியை சந்தித்திருப்பது அதன் தொண்டர்களுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்துள்ளது.

கட்சித்தலைவர் தேஜஸ்வி யாதவ் ரகோபூர் தொகுதியில் 14,532 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

மெகா கூட்டணியில் அங்கம் வகித்த காங்கிரஸ் கட்சி 6, மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு 2, ஐ.ஐ.பி. கட்சி 1, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு 1 இடங்களையும் பிடித்தன. இவற்றைத்தவிர மஜ்லிஸ் கட்சி 5 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றிருந்தன.

பீகார் தேர்தலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிரசாந்த் கிஷோரின் ஜன சுராஜ் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பா.ஜ.க.வுக்கு முதல்-மந்திரி பதவி?

பீகாரில் வரலாறு காணாத வெற்றியை பெற்ற பா.ஜனதா கூட்டணி மீண்டும் ஆட்சியமைக்கிறது. மாநிலத்தின் முதல்-மந்திரியாக நிதிஷ் குமார் மீண்டும் பதவியேற்பார் என தெரிகிறது. அதேநேரம் மாநிலத்தில் அதிக இடங்களை பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருப்பதால், பா.ஜனதாவை சேர்ந்த ஒருவரே முதல்-மந்திரியாக வேண்டும் என அந்த கட்சியினரிடம் இருந்து கோரிக்கை எழுந்திருக்கிறது.

பா.ஜ.க. சொந்தமாக ஆட்சியமைக்காத ஒரு சில மாநிலங்களில் பீகாரும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்