மணிப்பூர்: டிரோன், துப்பாக்கி, வெடிகுண்டு உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்
10 கையெறி குண்டுகள், 4 டெட்டனேட்டர்கள், 3 கிலோ எடையுள்ள சக்தி வாய்ந்த வெடிகுண்டு, 6 கண்ணீர் புகை குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.;
கோப்புப்படம்
இம்பால்,
மணிப்பூரில் கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் குகி மற்றும் மெய்தி இன குழுக்களுக்கு இடையே நடந்த மோதலால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. பல இடங்களிலும் வன்முறை பரவியதில் 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து, ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுப்படுத்தப்பட்டது.
எனினும், தொடர்ந்து அவ்வப்போது வன்முறை ஏற்பட்டு வருகிறது. இதனை தடுக்கும் நடவடிக்கையாக அரசு கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது. இந்நிலையில், பல்வேறு மாவட்டங்களில் வன்முறையால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் பாதுகாப்பு படையினர் தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக காக்சிங் மாவட்டத்தின் வபாகை நடேகோங் துரென்மெய் பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபட்டபோது, 6 துப்பாக்கிகள் மற்றும் அதிக அளவிலான வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன.
அப்படி பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கிகளில் எம்-16 ரக துப்பாக்கி, எஸ்எல்ஆர், சிங்கிள் பேரல், போல்ட்-ஆக்சன் துப்பாக்கிகள் மற்றும் 7.65 மி.மீ. கைத்துப்பாக்கிகள் ஆகியவை அடங்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.
இவை தவிர, 10 கையெறி குண்டுகள், 4 டெட்டனேட்டர்கள், 3 கிலோ எடையுள்ள சக்தி வாய்ந்த வெடிகுண்டு, 6 கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் 71 தோட்டாக்கள் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோன்று, நாற்கரங்களை கொண்ட டிரோன் மற்றும் அதனுடன் தொடர்புடைய துணைக்கருவிகளும் கைப்பற்றப்பட்டன. இதனால், அந்த பகுதியில் ஏற்படவிருந்த பெரிய அளவிலான வன்முறை தவிர்க்கப்பட்டு உள்ளது. பதற்றம் தணிந்து உள்ளது. தொடர்ந்து பாதுகாப்பு படையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.