உலகில் முதன்முறையாக... இந்திய ராணுவத்தில் ராம்ஜெட் தொழில்நுட்ப பயன்பாடு

ராஜஸ்தானின் பொக்ரான் பகுதியில் உள்ள பீரங்கி குண்டு சுடுதலுக்கான மையத்தில் சோதனை முயற்சி வெற்றி பெற்றிருக்கிறது.;

Update:2026-01-01 11:48 IST

புதுடெல்லி,

இந்திய ராணுவத்திற்கான தளவாடங்கள், ஆயுதங்கள், உப பொருட்கள் ஆகியவற்றை அதிக அளவில் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யும் வகையிலான நடவடிக்கைகளை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. இதன்படி, ஆத்மநிர்பார் பாரத் அல்லது சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவில் ராணுவத்திற்கு தேவையான ஆயுதங்கள் அதிக அளவில் தயாரிக்கப்பட்டு வருகின்றன. வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யப்படுகின்றன.

இந்த நிலையில், இந்திய ராணுவத்தில் உபயோகப்படுத்தப்படும் 155 மி.மீ. அளவிலான பீரங்கி குண்டுகளை சுடுவதற்கு ராம்ஜெட் என்ஜினை பயன்படுத்த முடிவாகி உள்ளது. இதனால், உலகிலேயே இந்த தொழில்நுட்ப பயன்பாட்டை செயல்படுத்த போகும் முதல் ராணுவம் என்ற பெருமையையும் பெறுகிறது.

இதற்காக சென்னை ஐ.ஐ.டி.யுடன் இணைந்து இந்த தொழில்நுட்ப உருவாக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால், எதிரிகளின் இலக்கை கடுமையாக தாக்கும் திறனுடன் கூட, தற்போதுள்ள தொலைவை விட 30 முதல் 50 சதவீதம் கூடுதல் தொலைவிலான இலக்கையும் சென்றடைய முடியும்.

ஏற்கனவே ராஜஸ்தானின் பொக்ரான் பகுதியில் உள்ள பீரங்கி குண்டு சுடுதலுக்கான மையத்தில் சோதனை முயற்சி வெற்றி பெற்றிருக்கிறது. தொடர்ந்து, பரிசோதனை மற்றும் மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த தொழில்நுட்பம் உருப்பெற்றவுடன், அது இந்திய ராணுவத்தின் பயன்பாட்டில் சேர்க்கப்படும்.

இதனால், இந்திய ராணுவத்தில் உள்ள இலகு ரக, நடுத்தர மற்றும் கனரக பீரங்கிகளில் இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என தெரிகிறது.

Tags:    

மேலும் செய்திகள்