நிம்சுலைடு வலி நிவாரண மருந்துக்கு மத்திய அரசு தடை
இந்தியாவில் இந்த மருந்து பயன்பாட்டுக்கு, முதன்முறையாக 1995-ம் ஆண்டு இந்திய மருந்து கட்டுப்பாட்டு கழகம் ஒப்புதல் அளித்து இருந்தது.;
புதுடெல்லி,
காய்ச்சல் மற்றும் வலி நிவாரணத்திற்காக நிம்சுலைட் என்ற மருந்து பயன்படுத்தப்படுகிறது. எனினும், அதிக அளவில் இதனை பயன்படுத்தும்போது, அது கடுமையான பக்க விளைவை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
இந்த நிலையில், மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் இந்த மருந்துக்கு தடை விதித்து உள்ளது. இதன்படி, 100 மி.கிராம் அளவுக்கு கூடுதலாக உள்ள மருந்துகளுக்கு உடனடியாக தடை விதிக்கப்படுகிறது.
இந்த மருந்துகளின் உற்பத்தி, விற்பனை செய்தல் மற்றும் வினியோகம் ஆகியவற்றை தடை செய்வது பொது நலனுக்கு அவசியம் என்ற அடிப்படையில், மத்திய அரசு இந்நடவடிக்கையை எடுத்து உள்ளது. எனினும், 100 மி.கிராமுக்கு குறைவான மருந்து பயன்பாட்டுக்கு தடை இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவில் இந்த மருந்து பயன்பாட்டுக்கு, முதன்முறையாக 1995-ம் ஆண்டு இந்திய மருந்து கட்டுப்பாட்டு கழகம் ஒப்புதல் அளித்து இருந்தது. ஏறக்குறைய 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த மருந்து மக்களை சென்றடைகிறது.