உலக அளவில் என்.டி.ஆர்.எப். வீரர்கள் மதிப்பை சம்பாதித்துள்ளனர்; பிரதமர் மோடி புகழாரம்
சவாலான தருணங்களில் அயர்வின்றி பணியாற்றிய அவர்களுடைய சில புகைப்படங்களையும் பிரதமர் மோடி பகிர்ந்து உள்ளார்.;
புதுடெல்லி,
நாட்டில் புயல், வெள்ளம், நிலச்சரிவு போன்ற பேரிடர் காலங்களில் மக்களை பாதுகாப்பதற்காக, தேசிய பேரிடர் மீட்பு படை (என்.டி.ஆர்.எப்.) கடந்த 2006-ம் ஆண்டு ஜனவரி 19-ந்தேதி துவங்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஒவ்வோர் ஆண்டும், தேசிய பேரிடர் மீட்பு படை எழுச்சி தினம் கொண்டாடப்படுகிறது.
இதனை முன்னிட்டு பிரதமர் மோடி என்.டி.ஆர்.எப். படையினருக்கு தன்னுடைய நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்து கொண்டார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்தியில், பேரிடர் காலங்களில் எப்போதும் முன்கள பணியாளர்களாக செயல்படுபவர்கள் என அவர்களை பாராட்டினார்.
அவர்கள், தனித்திறனுடன் செயல்பட்டு, சிக்கலில் இருந்து மக்களை விடுவிக்கும் பணியை திறம்பட செய்கிறார்கள். அவர்கள் மக்களை பாதுகாப்பதற்காக முயற்சிகள் எடுத்து, நிவாரணம் அளித்து, மக்களின் நம்பிக்கையையும் மீட்டெடுக்கின்றனர்.
இந்த தேசிய பேரிடர் மீட்பு படை எழுச்சி தினத்தில், நெருக்கடியான தருணங்களில் தீர்க்கத்துடன் முடிவெடுக்கும் ஆண் மற்றும் பெண் ஆகியோருக்கு ஆழ்ந்த பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன்.
நாட்டுக்கு உயர்தர சேவையை அவர்கள் வழங்குகின்றனர். பேரிடருக்கு தயாராவது மற்றும் பொறுப்புடன் செயல்படுவது என உலகளவில் என்.டி.ஆர்.எப். வீரர்கள் மதிப்பை சம்பாதித்துள்ளனர் என தெரிவித்து உள்ளார். சவாலான தருணங்களில் அயர்வின்றி பணியாற்றிய அவர்களுடைய சில புகைப்படங்களையும் அவர் பகிர்ந்து உள்ளார்.