நாளை தேர்தல்.. பா.ஜ.க. புதிய தேசிய தலைவராக நிதின் நபின் தேர்ந்தெடுக்கப்படுவாரா?
தேர்தல் நாளை நடத்தப்பட்டு, அன்றைய தினமே கட்சியின் புதிய தேசிய தலைவர் யார் என்பது பற்றி அறிவிக்கப்பட்டு விடும்.;
புதுடெல்லி,
பா.ஜ.க. தேசிய தலைவராக ஜெ.பி. நட்டா பதவி வகித்து வருகிறார். இவரது பதவிக்காலம் முன்பே முடிவடைந்து விட்டது. எனினும், சட்டசபை மற்றும் மக்களவை தேர்தலை முன்னிட்டு நட்டாவின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது.
இந்த நிலையில், பா.ஜ.க. தேசிய தலைவருக்கான தேர்தல் நடத்துவது பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதன்படி, இன்று மதியம் 2 மணி முதல் 4 மணிக்குள் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யலாம். வேட்புமனு மீதான பரிசீலனை 4 மணி முதல் 5 மணி வரை நடைபெறும்.
இதன்பின்னர் நாளை தேர்தல் நடத்தப்பட்டு, அன்றைய தினமே கட்சியின் புதிய தேசிய தலைவர் யார் என்பது பற்றி அறிவிக்கப்பட்டு விடும். தேர்தலை கே. லட்சுமண் நடத்த உள்ளார். பா.ஜ.க.வின் புதிய தேசிய தலைவராக யார் வருவார்? என்பது கேள்வியாக உள்ளது.
இதற்கு பதிலாக, தற்போது அக்கட்சியின் தேசிய செயல் தலைவராக செயல்பட்டு வரும் நிதின் நபின், பா.ஜ.க. தேசிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புகள் உள்ளன என கூறப்படுகிறது. ஏனெனில், நட்டாவும் தேசிய செயல் தலைவராக இருந்து, அதன்பின்பு பா.ஜ.க. தேசிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதற்கேற்ப, நபின் தேசிய செயல் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதும், பிரதமர் மோடி, மத்திய மந்திரி அமித் ஷா, கட்சியின் மூத்த தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோரை நேரில் சந்தித்து ஆசி பெற்றார். அவர்களின் ஆதரவு நபினுக்கு உள்ளது என தகவல் தெரிவிக்கின்றது.