போலந்து துணை பிரதமருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் இன்று சந்திப்பு

டெல்லியில் மத்திய மந்திரி ஜெய்சங்கருடனான சந்திப்புக்கு பின்னர் சிகோர்ஸ்கி போலந்து நாட்டுக்கு புறப்பட்டு செல்வார்.;

Update:2026-01-19 08:52 IST

புதுடெல்லி,

போலந்து நாட்டின் துணை பிரதமர் மற்றும் வெளியுறவு துறை மந்திரியான ரதோஸ்லாவ் சிகோர்ஸ்கி இந்தியாவில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக கடந்த 17-ந்தேதி இந்தியாவுக்கு வருகை தந்த அவரை, டெல்லியில் கூடுதல் செயலாளர் பூஜா கபூர் வரவேற்றார்.

ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகருக்கு வருகை தந்த அவர், ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் நேற்று கலந்து கொண்டார். இந்நிலையில், இன்று காலை அவர் டெல்லி சென்று சேர்ந்துள்ளார்.

டெல்லியில் அவர், மத்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கரை இன்று சந்தித்து பேசுவார். இந்த சந்திப்பில், இந்தியா மற்றும் போலந்து நாடுகளுக்கு இடையேயான மூலோபாய கூட்டாண்மை பற்றி இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், உக்ரைன் மீது ரஷியா நடத்தும் தாக்குதலால் ஐரோப்பிய கண்டமே நெருக்கடியில் சிக்கி உள்ளது. அதன் ஸ்திரத்தன்மை பாதிக்கப்பட்டு உள்ளது என கூறினார்.

போலந்து, தன்னுடைய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.7 சதவீத நிதியை நாட்டு பாதுகாப்புக்காக செலவழிக்கிறது என்று அப்போது கூறினார். ஐரோப்பிய பாதுகாப்புக்காக உறுதியுடன் செயல்படுவோம் என்றும் கூறினார்.

இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையே வெளிப்படையான வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தையின் இறுதி கட்டத்தில் இந்தியா உள்ளது. இந்த சூழலில், போலந்து துணை பிரதமர் சிகோர்ஸ்கியின் வருகை அமைந்துள்ளது. டெல்லியில் மத்திய மந்திரி ஜெய்சங்கருடனான சந்திப்புக்கு பின்னர் சிகோர்ஸ்கி போலந்து நாட்டுக்கு இன்று புறப்பட்டு செல்வார்.

Tags:    

மேலும் செய்திகள்