ஏர் இந்தியா விமான விபத்தில் உயிர் பிழைத்த ரமேஷ் விஸ்வாஸ் குமாரின் புதிய வீடியோ வெளியீடு
ஏர் இந்தியா விமான விபத்தில் உயிர் பிழைத்த ரமேஷ் விஸ்வாஸ் குமாரின் புதிய வீடியோ வெளியாகியுள்ளது.;
ஆமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு ஏர் இந்தியாவுக்கு சொந்தமான விமானம் ஒன்று கடந்த 12 ஆம் தேதி மதியம் புறப்பட்டது. அந்த விமானத்தில் இந்தியா, இங்கிலாந்து, கனடா மற்றும் போர்ச்சுக்கல் நாடுகளை சேர்ந்த 230 பயணிகள் மற்றும் 2 விமானிகள், 10 பணியாளர்கள் என 242 பேர் இருந்தனர்.ஓடு பாதையில் இருந்து விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் கட்டுப்பாட்டை இழந்தது.
இதையடுத்து அவசர கால அழைப்பை விடுத்த விமானி, அந்த விமானத்தை விமான நிலையத்தின் அருகில் இருந்த மேகனிநகர் பகுதியில் இருந்த குதிரைப்பந்தய மைதானத்தில் இறக்க முயன்றார். அதற்குள் கட்டுப்பாட்டை இழந்த அந்த விமானம், அந்த பகுதியில் இருந்த பி.ஜே. மருத்துவக்கல்லூரி விடுதி கட்டிடத்தில் விழுந்து, வெடித்து சிதறியது.
இந்த கோர விபத்தில் விமானத்தில் இருந்த 241 பேரும், மருத்துவக்கல்லூரி விடுதிக்கட்டிடத்தில் இருந்த 5 மருத்துவ மாணவர்கள் மற்றும் அந்த மருத்துவக்கல்லூரி வளாகத்தில் இருந்த 19 பேர் என 265 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். அவர்களில் குஜராத் மாநில முன்னாள் முதல்-மந்திரி விஜய் ரூபானியும் ஒருவர்.பலியான பலரது உடல் அடையாளம் காணமுடியாத நிலையில் உள்ளதால், உடல்களை அடையாளம் காண்பதற்கு மரபணு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. பரிசோதனை முடிந்து 6 பேரின் உடல்கள் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த விபத்தில், லண்டன் குடியுரிமை பெற்ற இந்தியரான விஸ்வாஸ் குமார் ரமேஷ் என்பவர், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். காயம் அடைந்த அவர் ஆமதாபாத் சிவில் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் தற்போது நலமுடன் உள்ளார்.
விமான விபத்தின் போது உயிர் பிழைத்த விஸ்வாஸ் குமார் ரமேஷின் புதிய வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. மொபைல் போன் ஒன்றை கையில் வைத்துக்கொண்டு வெள்ளை நிற டி ஷார்ட் உடன் ரமேஷ், விபத்து நடைபெற்ற இடத்தில் இருந்து காயங்களுடன் நடந்து வருகிறார். அவரை அங்கிருந்த உள்ளூர் மக்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறார்கள். இந்த புதிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் 11A- இருக்கையில் விஷ்வாஸ் குமார் ரமேஷ் பயணம் செய்து இருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.