ஞாயிற்றுக்கிழமையான பிப்ரவரி 1-ந்தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்ய நாடாளுமன்ற குழு பரிந்துரை
இந்த ஆண்டு பிப்ரவரி 1-ந்தேதி வார விடுமுறையான ஞாயிற்றுக்கிழமை அன்று வருகிறது.;
புதுடெல்லி,
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 28-ந்தேதி இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி உரையுடன் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1-ந்தேதி காலை 11 மணிக்கு தாக்கல் செய்யும் நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.
ஆனால் இந்த ஆண்டு பிப்ரவரி 1-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை களில் அரசு அலுவலங்களும், பங்கு சந்தைகளும் மூடப்பட்டிருக்கும். அது மட்டுமின்றி அன்று குரு ரவிதாஸ் ஜெயந்தி தினமாகும். இதனால் இந்த ஆண்டு பிப்ரவரி 1-ந்தேதி பட்ஜெட் தாக்கல் ஆகுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மந்திரிசபை குழு கூட்டத்தில் இன்று ஆலோசிக்கப்பட்டது. பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், பிப்ரவரி 1-ந்தேதி மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய நாடாளுமன்ற குழு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்வதன் மூலம், நிதி மந்திரியாக இருந்த காலத்தில் தொடர்ச்சியாக 9 மத்திய பட்ஜெட்டுகளை தாக்கல் செய்த முதல் நிதி மந்திரி என்ற பெருமையை நிர்மலா சீதாராமன் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.