பஞ்சாப்: பல இடங்களில் தேச விரோத வாசகங்கள்; போலீசார் தீவிர நடவடிக்கை

பெயிண்ட் தெளிக்கும் காட்சியை வீடியோவாக பதிவு செய்து, அதனை ஷெரா மன்னுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.;

Update:2025-08-09 06:47 IST

அமிர்தசரஸ்,

பஞ்சாபின் அமிர்தசரஸ் நகரின் பல்வேறு இடங்களில் பெயிண்ட் கொண்டு தேச விரோத வாசகங்களை எழுதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி போலீசாருக்கு தகவல் சென்றது. அவர்கள் தீவிர விசாரணை நடத்தினர்.

சம்பவம் பற்றி போலீஸ் கமிஷனர் குர்பிரீத் சிங் புல்லார் கூறும்போது, கடந்த 6 மற்றும் 7 ஆகிய நாட்களில் இரவில் அமிர்தசரஸ் நகருக்குட்பட்ட 3 இடங்களில் பெயிண்ட் தெளித்து தேச விரோத வாசகங்களை எழுதியுள்ளனர்.

இந்த சம்பவத்தில், படாலா மாவட்டத்தின் தர்காபாத் கிராமத்தில் வசித்து வரும் சிறுவன் உள்பட 2 பேரை கைது செய்துள்ளோம். அவர்களில் ஒருவர் ஜஷான்பிரீத் சிங் என அடையாளம் காணப்பட்டு உள்ளார் என்றார்.

தொடர் விசாரணையில், சமூக ஊடகத்தின் வழியே ஷாம்ஷெர் சிங் என்ற ஷெரா மன் என்பவரை இருவரும் தொடர்பு கொண்டுள்ளனர். இருவருக்கும் பணம் தரப்படும் என கூறி, ஆசை காட்டப்பட்டு உள்ளது. இதனால், பெயிண்ட் தெளிக்கும் காட்சியை வீடியோவாக பதிவு செய்து, அதனை ஷெரா மன்னுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

ஆனால், இன்று வரை பணம் எதுவும் தரவில்லை. மன்னின் பேச்சை கேட்டு அவர்கள் இருவரின் வாழ்க்கை சிக்கலில் முடிந்துள்ளது என புல்லார் கூறியுள்ளார். இதில், வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்