அதிர்ச்சி சம்பவம்.. 4-வதும் பெண் குழந்தை பிறந்ததால் தாய் செய்த வெறிச்செயல்

அந்த பெண்ணுக்கு மீண்டும் பெண் குழந்தை பிறந்தது. இதனால் அவர் கடும் விரக்தி அடைந்ததாக கூறப்படுகிறது.;

Update:2025-11-26 12:55 IST

பெலகாவி,

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் ராமதுர்கா தாலுகா ஹிரேமுலங்கி கிராமத்தை சேர்ந்தவர் அஸ்வினி ஹலகட்டி. இவருக்கு திருமணமாகி கணவர், 3 பெண் குழந்தைகள் உள்ளனர். ஆண் குழந்தை இல்லாத ஏக்கத்தில் இருந்த அஸ்வினி, 4-வது முறையாக கர்ப்பமானார். இதனால் தனக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என்று எதிர்பார்த்து காத்திருந்தார்.

இந்த நிலையில் அவருக்கு கடந்த 23-ந்தேதி பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து குடும்பத்தினர் அவரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு பிரசவத்துக்காக அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு மீண்டும் பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் அஸ்வினி விரக்தி அடைந்துள்ளார்.

பின்னர் மறுநாள் குழந்தையுடன் அஸ்வினி மற்றும் குடும்பத்தினர் வீட்டுக்கு திரும்பினர். இந்த நிலையில் நேற்று காலை அஸ்வினியின் தாய் பச்சிளம் குழந்தையை தூங்க வைத்துவிட்டு அருகில் உள்ள கடைக்கு சென்றிருந்தார். 4-வதும் பெண் குழந்தை பிறந்துவிட்டதே என வேதனையில் இருந்த அஸ்வினி, தான் பெற்ற மகள் என்றும் பாராமல் பச்சிளம் குழந்தையை கழுத்தை நெரித்துள்ளார். இதில் அந்த குழந்தை மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்தது.

இதற்கிடையே வெளியே சென்றிருந்த அஸ்வினியின் தாய் வீட்டுக்கு திரும்பியதும், குழந்தை மூச்சுவிடவில்லை என கூறி அஸ்வினி அழுது நாடகமாடி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அஸ்வினியின் தாய், குழந்தையை உடனடியாக ராமதுர்கா அரசு ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றார். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர், குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். மேலும் குழந்தையின் கழுத்து நெரிக்கப்பட்டு இருப்பதாகவும், அதனால் மூச்சுத்திணறி இறந்ததாகவும் தெரிவித்தார்.

இதுகுறித்து டாக்டர், சுரேபனா போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் ஆஸ்பத்திரிக்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அஸ்வினி மற்றும் அவரது தாயிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது 4-வதும் பெண் குழந்தை பிறந்ததால், தான் பெற்ற குழந்தையையே அஸ்வினி கழுத்தை நெரித்து கொன்றது தெரியவந்தது.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அஸ்வினியை கைது செய்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்