‘சித்தராமையாவும், டி.கே.சிவக்குமாரும் சகோதரர்கள் போல் பணியாற்றி வருகின்றனர்’ - சச்சின் பைலட்
நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவதே எங்கள் நோக்கம் என்று சச்சின் பைலட் தெரிவித்தார்.;
பெங்களூரு,
கர்நாடகத்தில் கடந்த 2023-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி அமைந்தது. முதல்-மந்திரி பதவிக்கு சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இடையே கடும் போட்டி எழுந்த நிலையில் இறுதியில் சித்தராமையா முதல்-மந்திரியாக நியமிக்கப்பட்டார். முதல்-மந்திரி பதவியை 2 பேரும் ஆட்சிக்காலத்தில் பாதியாக பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று அப்போது ரகசிய ஒப்பந்தம் போடப்பட்டதாக கூறப்படுகிறது.
அதன்படி சித்தராமையா ஆட்சி அதிகாரத்தில் 2.5 ஆண்டுகள் நிறைவு செய்துவிட்டதால் முதல்-மந்திரி பதவியை தனக்கு வழங்க வேண்டும் என்று துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் திடீரென போர்க்கொடி தூக்கினார். இது கர்நாடக அரசியலில் புயலை கிளப்பியது. இதற்கிடையில், காங்கிரஸ் மேலிட உத்தரவுப்படி சித்தராமையா மற்றும் டி.கே.சிவக்குமார் இருவரும் ஒன்றாக சிற்றுண்டி சாப்பிட்டு, தங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்று விளக்கமளித்தனர். இதன்மூலம் குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், சித்தராமையாவும், டி.கே.சிவக்குமாரும் சகோதரர்கள் போல் பணியாற்றி வருகின்றனர் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் சச்சின் பைலட் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பெங்களூருவில் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் கூறியதாவது;-
“சித்தராமையாவும், டி.கே.சிவக்குமாரும் சகோதரர்கள் போல் பணியாற்றி வருகின்றனர். மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், கர்நாடக முதல்-மந்திரியை தனது அண்ணன் என்றும், பதிலுக்கு அவரை தனது தம்பி என்று சித்தராமையாயும் கூறும்போதே பிரச்சினை முடிவுக்கு வந்துவிட்டது.
கர்நாடக அரசு முழு நேர்மையுடனும், அர்ப்பணிப்புடனும் செயல்பட்டு வருகிறது. தேர்தலுக்கு முன்பு நாங்கள் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நாங்கள் நிறைவேற்றுகிறோம். நாங்கள் கடுமையாக உழைத்து வருகிறோம். 2028 ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சி அபார பெரும்பான்மையுடன் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சிக்கு வரும் என்று நான் உறுதியளிக்கிறேன்.
கட்சியின் தலைமை எடுக்கும் எந்த முடிவையும், மாநிலத்தில் உள்ள காங்கிரஸ் தொண்டர்கள் ஏற்றுக்கொள்வார்கள். நாங்கள் அனைவரும் இணைந்து பணியாற்றுவோம். கர்நாடக மாநிலம் உள்பட நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவதே எங்கள் அனைவரின் நோக்கமாகும்."
இவ்வாறு அவர் தெரிவித்தார்.