இந்தியா-நியூசிலாந்து தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் - பேச்சுவார்த்தைகள் நிறைவு
இங்கிலாந்து, ஓமன், நியூசிலாந்து என பல்வேறு நாடுகளுடன் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை இந்தியா நிறைவு செய்து வருகிறது.;
புதுடெல்லி,
இந்தியா-நியூசிலாந்து இடையே தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்துள்ளன. இதன்படி அடுத்த ஆண்டு இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக பிரதமர் மோடி நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சனுடன் தொலைபேசியில் உரையாடினார். இதைத் தொடர்ந்து, இந்தியா-நியூசிலாந்து தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நிறைவடைந்ததக் இருநாட்டு தலைவர்களும் கூட்டாக அறிவித்தனர்.
கடந்த மார்ச் மாதம் நியூசிலாந்து பிரதமர் இந்தியாவிற்கு வருகை தந்தபோது இந்த ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்டன. இந்த நிலையில், இருநாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் இருநாடுகளின் விவசாயிகள், குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர், தொழிலதிபர்கள், மாணவர்கள், இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அடுத்த 5 ஆண்டுகளில் இருதரப்பு வர்த்தகத்தை இரட்டிப்பாக்குவது குறித்தும், அடுத்த 15 ஆண்டுகளில் நியூசிலாந்தில் இருந்து இந்தியாவில் ரூ.1 லட்சம் கோடிக்கும் அதிகமாக முதலீடு செய்வது குறித்தும் இருநாட்டு பிரதமர்களும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இங்கிலாந்து, ஓமன், நியூசிலாந்து என பல்வேறு நாடுகளுடன் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை இந்தியா தொடர்ந்து நிறைவு செய்து வரும் நிலையில், தற்போது நியூசிலாந்து நாட்டுடனும் ஒப்பந்தம் நிறைவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.