மாநிலங்களின் சம்பளம், ஓய்வூதிய செலவு 2½ மடங்கு அதிகரிப்பு
கடந்த 2013-2014 நிதியாண்டில், மாநிலங்களின் சம்பளம், ஓய்வூதியம், வட்டி ஆகியவற்றுக்கான செலவு ரூ.6 லட்சத்து 26 ஆயிரத்து 849 கோடியாக இருந்தது.;
புதுடெல்லி
இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் முதல்முறையாக 2013-2014 நிதியாண்டு முதல் 2022-2023 நிதியாண்டு வரையிலான 28 மாநிலங்களின் நிதிநிலையை ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-கடந்த 2013-2014 நிதியாண்டு முதல் 2022-2023 நிதியாண்டு வரையிலான 10 ஆண்டு காலகட்டத்தில் மாநிலங்களின் வருவாய் செலவினம் மொத்த செலவினத்தில் 80 சதவீதம் முதல் 87 சதவீதம்வரை இருந்தது. மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் 13 முதல் 15 சதவீதம்வரை இருந்தது. 2022-2023 நிதியாண்டில் வருவாய் செலவினம், மொத்த செலவில் 84.73 சதவீதமாக இருந்தது. மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் 13.85 சதவீதமாக இருந்தது.
2022-2023 நிதியாண்டில், மொத்த வருவாய் செலவினம் ரூ.35 லட்சத்து 95 ஆயிரத்து 736 கோடியாக இருந்தது. அவற்றில், சம்பளம், ஓய்வூதியம், வட்டி ஆகிய உறுதி செய்யப்பட்ட செலவு ரூ.15 லட்சத்து 63 ஆயிரத்து 649 கோடியாக இருந்தது.மானிய செலவு ரூ.3 லட்சத்து 9 ஆயிரத்து 625 கோடியாகவும், மானிய உதவி செலவு ரூ.11 லட்சத்து 26 ஆயிரத்து 486 கோடியாகவும் இருந்தது. மேற்கண்ட 3 பிரிவுகளின் மொத்த செலவு ரூ.29 லட்சத்து 99 ஆயிரத்து 760 கோடியாக இருந்தது. இது மொத்த வருவாய் செலவினத்தில் 83 சதவீதம் ஆகும்.
அதே சமயத்தில், கடந்த 2013-2014 நிதியாண்டில், மாநிலங்களின் சம்பளம், ஓய்வூதியம், வட்டி ஆகியவற்றுக்கான செலவு ரூ.6 லட்சத்து 26 ஆயிரத்து 849 கோடியாக இருந்தது. 2022-2023 நிதியாண்டில் ரூ.15 லட்சத்து 63 ஆயிரத்து 649 கோடியாக, அதாவது 10 ஆண்டுகளில், 2.49 மடங்கு அதிகரித்து விட்டது.2013-2014 நிதியாண்டில் ரூ.96 ஆயிரத்து 479 கோடியாக இருந்த மானிய செலவு, 2022-2023 நிதியாண்டில் ரூ.3 லட்சத்து 9 ஆயிரத்து 625 கோடியாக, அதாவது 3.21 மடங்கு உயர்ந்து விட்டது. வருவாய் செலவினம் 2.66 மடங்கு உயர்ந்து விட்டது.
கடந்த 2022-2023 நிதியாண்டில், 19 மாநிலங்களில், சம்பள செலவு அதிகமாகவும், ஓய்வூதியம், வட்டி ஆகியவை அடுத்தடுத்த இடங்களிலும் இருந்தன. ஆனால், தமிழ்நாடு, ஆந்திரா, குஜராத், அரியானா, கர்நாடகா, பஞ்சாப், ராஜஸ்தான், தெலுங்கானா, மேற்கு வங்காளம் ஆகிய 9 மாநிலங்களில் ஓய்வூதிய செலவை விட வட்டி செலவு அதிகமாக இருந்தது.2022-2023 நிதியாண்டில் வருவாய் பற்றாக்குறையை சந்தித்த 12 மாநிலங்களில், தமிழ்நாடு, ஆந்திரா, அசாம், இமாசலபிரதேசம், கேரளா, மேகாலயா, பஞ்சாப், ராஜஸ்தான், மேற்கு வங்காளம் ஆகிய 9 மாநிலங்கள் மட்டும் நிதிக்குழுவின் வருவாய் பற்றாக்குறை மானியங்களை பெற்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.