ஆற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை

ஏனாமில் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் இளம்பெண் ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். பாலத்தில் சுற்றி வந்து வளர்ப்பு நாய் பாசப்போராட்டம் நடத்தியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.;

Update:2023-07-18 22:29 IST

புதுச்சேரி

ஏனாமில் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் இளம்பெண் ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். பாலத்தில் சுற்றி வந்து வளர்ப்பு நாய் பாசப்போராட்டம் நடத்தியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இளம்பெண் தற்கொலை

புதுவை மாநிலம் ஏனாம் பெர்ரி ரோட்டை சேர்ந்தவர் ரமேஷ். அவரது மகள் மண்டங்கி காஞ்சனா (வயது 23). இவர் ஓட்டல் ஒன்றில் வரவேற்பாளராக பணிபுரிந்து வந்தார். இவர் அதே பகுதியை சேர்ந்த டிரைவர் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தெரியவரவே மண்டங்கி காஞ்சனாவின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் மனமுடைந்த அவர் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தார். இதைத்தொடர்ந்து கடந்த 16-ந்தேதி நடைபயிற்சி மேற்கொள்வதாக கூறிவிட்டு வீட்டைவிட்டு வெளியேறி உள்ளார். கோதாவரி ஆற்று பாலத்துக்கு (பாலயோகி பாலம்) வந்து ஆற்றில் குதித்து தற்கொலை செய்துள்ளார்.

வளர்ப்பு நாய்

ஆனால் அவர் தற்கொலை செய்துகொண்ட விவரம் யாருக்கும் தெரியவில்லை. அவரை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இதுதொடர்பாக ஏனாம் போலீசிலும் புகார் செய்யப்பட்டு தேடுதல் வேட்டை நடந்தது.

இந்தநிலையில் காஞ்சனாவுடன் சென்ற வளர்ப்பு நாய் ஆற்றுப்பாலத்தில் தனியாக ஆற்று தண்ணீரை எட்டிப்பார்த்த வண்ணம் சுற்றி சுற்றி வந்தது.

மேலும் மண்டங்கி காஞ்சனா அணிந்திருந்த செருப்பும் பாலத்தில் கிடந்தது. இதைகண்ட உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். எனவே அவர் ஆற்றில் குதித்து தற்கொலை செய்திருக்கலாம் என்று கருதி தேடும் பணியில் ஈடுபட்டனர்.

பாசப்போராட்டம்

இதற்கிடையே இன்று அவரது உடல் ஆற்றில் மிதந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஏனாம் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இளம் பெண் தற்கொலை செய்த ஆற்றுப்பாலத்தில் சுற்றி சுற்றி வந்து வளர்ப்பு நாய் பாசப்போராட்டம் நடத்தியது பொதுமக்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்