முதியவரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.4 லட்சம் அபேஸ்

முதியவரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.4 லட்சம் அபேஸ் செய்யப்பட்டது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-10-26 17:39 GMT

புதுச்சேரி

முதியவர்

புதுச்சேரி அரவிந்தர் வீதியை சேர்ந்தவர் வைத்தியநாதன் (வயது 61). இவர் புதுவையில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் கணக்கு வைத்துள்ளார். இந்தநிலையில் வைத்தியநாதன் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. மறுமுனையில் பேசியவர், வங்கியில் இருந்து மேலாளர் பேசுவதாக தன்னை முதலில் அறிமுகம் செய்துகொண்டு பேசினார்.

மேலும் அவர், தங்களது வங்கிக்கணக்கு இன்றுடன் காலாவதி ஆகிறது. இதை தவிர்க்க வேண்டும் என்றால் உங்கள் செல்போன் எண்ணுக்கு ஒரு ரகசிய எண் (ஓ.டி.பி.) வரும். அதை சொன்னால் வங்கி கணக்கை தொடர்ந்து செயல்பாட்டில் இருக்க உதவி செய்வதாக தெரிவித்தார்.

ரூ.4 லட்சம் அபேஸ்

இதனை உண்மை என்று நம்பிய வைத்தியநாதன் செல்போன் எண்ணுக்கு வந்த ரகசிய எண், ஆதார், பான் கார்டு, வங்கி விவரங்களை தெரிவித்தார். இதையடுத்து அவர் இணைப்பை துண்டித்தார். அடுத்த சில நிமிடங்களில் வைத்தியநாதன் வங்கி கணக்கில் இருந்த ரூ.4 லட்சத்து 10 ஆயிரம் பணம் எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தன்னுடன் பேசிய வங்கி மேலாளரின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேச முயன்றார். ஆனால் அந்த எண் 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது. வங்கி மேலாளர் போல் மர்மநபர் பேசி பணத்தை அபேஸ் செய்தது தெரியவந்தது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வைத்தியநாதன், இதுகுறித்து சைபர்கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கீர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

ரகசிய எண்

இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் கூறுகையில், `பொதுமக்கள் தங்கள் வங்கி கணக்கு விவரங்களை யாருக்கும் தெரிவிக்க வேண்டாம். வங்கி மேலாளர்கள் ஒருபோதும் ரகசிய எண்ணை கேட்க மாட்டார்கள். எனவே யாரேனும் உங்கள் வங்கி கணக்கில் இணைக்கப்பட்டுள்ள செல்போன் எண்ணுக்கு வந்த ரகசிய எண்ணை கேட்டால் தெரிவிக்க வேண்டாம்' என கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்