அமைச்சர் நமச்சிவாயம் - ஆசிரியர்கள் பேச்சுவார்த்தை தோல்வி

புதுவையில் இடமாறுதல் விவகாரம் தொடர்பாக அமைச்சர் நமச்சிவாயத்துடன் ஆசிரியர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

Update: 2023-07-01 16:39 GMT

புதுச்சேரி

இடமாறுதல் விவகாரம் தொடர்பாக அமைச்சர் நமச்சிவாயத்துடன் ஆசிரியர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

ஆசிரியர்கள் தயக்கம்

புதுவையில் ஆசிரியர்கள் இடமாறுதல் விவகாரத்தில் முடிவு எடுக்கப்படாத நிலை இருந்து வருகிறது. ஏற்கனவே காரைக்காலில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள் மாறுதல் கேட்டு வரும் நிலையில் புதுவை ஆசிரியர்கள் காரைக்காலுக்கு செல்ல தயக்கம் காட்டி வருவதே அரசு முடிவு எடுக்க முடியாமல் இழுபறி இருந்து வருகிறது.

இதற்கிடையே இடமாறுதல் தொடர்பாக வரைவு கொள்கைகள் வெளியிடப்பட்டு அது குறித்து ஆசிரியர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. அதற்கு ஒரு தரப்பினர் ஆதரவும், மற்றொரு தரப்பினர் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.

வழிகாட்டுதல்கள்

இந்தநிலையில் இடமாறுதல் தொடர்பாக சமீபத்தில் வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் இடமாறுதல் கலந்தாய்வும் நடத்தப்படுகிறது. இந்த இடமாறுதல் வழிகாட்டுதல்களுக்கு புதுவை அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு, அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர் நலச்சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

நேற்று கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பணிமூப்பு அடிப்படையிலேயே ஆசிரியர்களை இடமாறுதல் செய்யவேண்டும் என்று கோஷம் எழுப்பினார்கள். நள்ளிரவு வரை இந்த போராட்டத்தில் நீடித்த நிலையில் கிழக்குப்பகுதி போலீஸ் சூப்பிரண்டு சுவாதி சிங் பேச்சுவார்த்தை நடத்தினார். அவரது சமரசத்தை தொடர்ந்து ஆசிரியர்கள் கலைந்து சென்றனர்.

அமைச்சருடன் பேச்சுவார்த்தை

இந்தநிலையில் கல்வி அமைச்சர் நமச்சிவாயத்தை சந்தித்து பேச இன்று சட்டசபை முன் ஆசிரியர்கள் திரண்டனர். ஆனால் அப்போது அமைச்சர் நமச்சிவாயம் சட்டசபைக்கு வராததால் அவர்களை பாரதி பூங்காவில் போலீசார் அமரவைத்தனர்.

அமைச்சர் நமச்சிவாயம் வந்தபின் அவருடன் அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு கவுரவ தலைவர் சேஷாச்சலம் மற்றும் பல்வேறு ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினா். அப்போது கல்வித்துறை இயக்குனர் பிரியதர்ஷினி உடனிருந்தார்.

தோல்வியில் முடிந்தது

அப்போது அமைச்சர் நமச்சிவாயம், புதிய வழிகாட்டுதல் முறைப்படி இடமாறுதலை ஏற்று பணியாற்ற வேண்டும் என்றும், காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். ஆனால் அதை ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் ஏற்க மறுத்துவிட்டனர். தமிழகத்தில் உள்ளபடி பணிமூப்பு அடிப்படையிலேயே இடமாறுதல் செய்யவேண்டும். வருகிற 11-ந்தேதி வரை கலந்தாய்வை நிறுத்தி வைக்கவேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்பவேண்டும் என்று வலியுறுத்தினார்கள். இந்த பேச்சுவார்த்தையின்போது எந்த முடிவும் எடுக்கப்படாமல் தோல்வியில் முடிந்தது.

கலந்தாய்வு தள்ளிவைப்பு

இதைத்தொடர்ந்து ஆசிரியர்கள் முதல்-அமைச்சர் ரங்கசாமியை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினார்கள். அப்போது முதல்-அமைச்சர் ரங்கசாமி காரைக்காலில் 4 ஆண்டுகளாக பணிபுரிபவர்களுக்கு புதுச்சேரிக்கு இடமாறுதல் தர வேண்டும். இதுதொடர்பாக அனைவரும் கலந்து பேசி ஒரு முடிவுடன் வாருங்கள் என்று கூறினார்.

இதையடுத்து ஆசிரியர்களின் கோரிக்கையான கலந்தாய்வை வருகிற 11-ந்தேதி வரை தள்ளி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்