பெண்களுக்கு விரைவில் ஊட்டச்சத்து பெட்டகம்

பெண்களுக்கு விரைவில் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்படும் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

Update: 2023-09-28 16:28 GMT

புதுச்சேரி

பெண்களுக்கு விரைவில் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்படும் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

ஊட்டச்சத்து வார விழா

புதுவை மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சார்பில் ஊட்டச்சத்து வாரவிழா ஜவகர் நகர் சமுதாய நலக்கூடத்தில் நேற்று நடந்தது. விழாவுக்கு சிவசங்கர் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

விழாவில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டு ஊட்டச்சத்து வார விழாவை தொடங்கி வைத்து பேசியதாவது:-

பெண்கள், குழந்தைகளுக்கு எப்போதும் சத்தான உணவு தேவை. உலக சுகாதார அமைப்பு 70 சதவீத பெண்கள் ரத்தசோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறியுள்ளது. இது நோயல்ல. அதற்கான அறிகுறி.

கீரைகள் சாப்பிடுவது ஆரோக்கியமானது. விலை உயர்ந்த பொருளில் தான் சத்து இருக்கும் என்று நாம் நினைக்கிறோம். இது தவறானது. ஒரு நாள் முருங்கைக்கீரை சாப்பிடுவது ரூ.1,000-க்கு சத்துமாவு வாங்கி சாப்பிடுவதற்கு சமமானது. வாரத்தில் ஒருமுறையாவது நாம் கீரை வகைகளை சாப்பிட வேண்டும்.

ஊட்டச்சத்து பெட்டகம்

காய்கறிகளை சாப்பிட்டால் தான் ஊட்டச்சத்து கிடைக்கும். தமிழகம், புதுச்சேரியில் உள்ள உணவு பழக்கவழக்கத்துக்கு ஈடாக எதுவுமில்லை. நெய் சாப்பிட்டால் கொழுப்பு என்பார்கள். பசுவின் நெய்யில் நல்ல கொழுப்புதான் உள்ளது. சாப்பாடு நன்கு ஜீரணமாகும் ரசம் நமது உணவு பழக்கவழக்கத்தில்தான் உள்ளது.

நாம் உணவு வகைகளை ஆர்டர் பண்ணி சாப்பிடுவதைவிட ஆர்டராக (முறையாக) சாப்பிட வேண்டும். கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் கொடுப்பது தொடர்பாக முதல்-அமைச்சரிடம் பேசியுள்ளேன். அது விரைவில் வழங்கப்படும்.

பழைய சோறு

பெண்களுக்கு உள்ள கெட்ட பழக்கம் என்னவென்றால் தங்களை தியாகிகளாக நினைத்து சரியாக சாப்பிடாதது தான். வீட்டில் மீதமாகும் உணவைத்தான் அவர்கள் சாப்பிடுவார்கள். அதுபோன்று இருக்கக்கூடாது. குடும்பத்தை கவனிக்கும் அவர்கள் நன்கு சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும்.

காலையில் பழைய சோறு சாப்பிடுவது நல்லது. நான்கூட பழைய சோறு சாப்பிட்டுவிட்டுதான் வந்தேன்.

இவ்வாறு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

நிகழ்ச்சியில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை இயக்குனர் முத்துமீனா, கோரிமேடு அன்னை தெரசா சுகாதார அறிவியல் நிலைய செவிலியர் பள்ளியின் முதன்மை செவிலியர் அதிகாரி பிரமிளா தமிழ்வாணன் உள்பட பலர் கலந்துகொண்டனர். தொடர்ந்து கவர்னர் அந்த பகுதியில் சாலை மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளதை பார்வையிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்