அன்று.. அம்மா; இன்று.. அப்பா: அரசியலில் 'சென்டிமெண்ட்' எடுபடுமா?
பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் புதிய திட்டங்கள் ஒரு சிலவற்றுக்கு 'அப்பா' என்று பெயர் வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.;
இந்திய அரசியல் வரலாற்றில் தமிழக அரசியல் களம் என்பது எப்போதுமே வேறுபட்டதாகவே இருந்து வந்திருக்கிறது. கடந்த அரை நூற்றாண்டுக்கு மேலாக திராவிட கட்சிகளே தமிழ் மண்ணில் வேரூன்றி நிற்கின்றன. 1967-ம் ஆண்டுக்கு பிறகு தேசிய கட்சிகளால் இங்கே காலூன்ற முடியவில்லை.பொதுவாக, அரசியல் தலைவர்களை மேடைகளில் பெயர் சொல்லி அழைக்கும் பழக்கம் நீண்ட நெடுங்காலமாகவே தமிழக அரசியலில் இல்லை. மாறாக, புனைப்பெயர்களில், பட்டப்பெயர்களில் அழைக்கும் பழக்கமே வழக்கமாக இருந்து வருகிறது. 'தந்தை' பெரியார், 'பேரறிஞர்' அண்ணா,
'புரட்சித் தலைவர்' எம்.ஜி.ஆர்., 'கலைஞர்' கருணாநிதி என்று அந்த பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.குறிப்பாக, அ.தி.மு.க. பொதுச் செயலாளராக இருந்து மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை 'புரட்சித் தலைவி அம்மா' என்றே அக்கட்சி தொண்டர்கள்உணர்ச்சி பொங்க அழைத்து வந்தனர். தொண்டர்களின் எல்லையில்லா அன்பை அவரும் புரிந்துகொண்டு 'அம்மா' என்ற அடைமொழியை ஏற்றுக்கொண்டதால், அவர் மறையும் காலம் வரை அந்தப் பெயரே நிலைத்து விட்டது. ஏன், இன்றைக்கும் அந்தப் பெயரை வைத்தே, அ.தி.மு.க. தொண்டர்கள் அவரை புகழ்ந்து பாராட்டி வருகிறார்கள்.
ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்த காலக்கட்டத்தில், 'அம்மா' பெயர் பல திட்டங்களுக்கு வைக்கப்பட்டது. அம்மா உணவகம், அம்மா குடிநீர், அம்மா உப்பு, அம்மா மருந்தகம்,அம்மா மினி கிளினிக், அம்மா ஸ்கூட்டர், அம்மா மடிக்கணினி திட்டம் உள்ளிட்டவை அதில் அடங்கும். இப்படி, ஜெயலலிதா என்ற பெயரையும் தாண்டி 'அம்மா' என்ற பெயரே நிலைத்துவிட்டது.இப்போது தமிழக முதல்-அமைச்சராக இருக்கும் மு.க.ஸ்டாலின், முன்பு 'தளபதி' என்ற அடைமொழியுடன் தி.மு.க. தொண்டர்களால் அழைக்கப்பட்டார்.
இன்றைக்கு 'தளபதி' என்பதில் இருந்து 'அப்பா' என்ற அந்தஸ்துக்கு அவர் உயர்ந்து இருக்கிறார். அவரது இந்த 4 ஆண்டு கால ஆட்சியில் பள்ளி, கல்லூரி மாணவ - மாணவிகளுக்கு எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்துள்ளதால், அவர் 'அப்பா' என்று மாணவர்களால் அழைக்கப்பட தொடங்கியிருக்கிறார். நான் முதல்வன், புதுமைப் பெண், தமிழ்ப்புதல்வன் என்ற திட்டங்கள் மட்டுமல்லாது, காலை உணவுத் திட்டத்தையும் அவர் தொடங்கினார். அதனால்தான் இப்போது அவர் மாணவர்களால் 'அப்பா' என்று அன்போடு அழைக்கப்படுகிறார்.
கடந்த ஜனவரி மாதம் 11-ந் தேதி சட்டசபையில், கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, "அப்பா.. அப்பா.. என்று மாணவர்கள் என்னை வாய் நிறைய அழைக்கும்போது அளவில்லாத மகிழ்ச்சி அடைகிறேன்" என்று உணர்ச்சி பொங்க தெரிவித்தார்.இதை வைத்து பார்க்கும்போது, அவரும் 'அப்பா' என்ற அடைமொழியை ஏற்றுக்கொண்டுவிட்டார் என்றே தெரிகிறது.
வருகின்ற 14-ந் தேதி சட்டசபையில் 2025-2026-ம் ஆண்டுக்கானபட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. அந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் புதிய திட்டங்கள் ஒரு சிலவற்றுக்கு 'அப்பா' என்று பெயர் வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.திரைத் துறையில் 'இளைய தளபதி' என்று அழைக்கப்பட்ட விஜய் இப்போது அரசியல் களம் புகுந்து இருக்கிறார். அரசியலில் அவருக்கான புனைப்பெயர் இன்னும் அறிவிக்கப்படவில்லை.அதே நேரத்தில், அரசியலில் தளபதியாக இருந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றைக்கு 'அப்பா' ஸ்தானத்துக்கு உயர்ந்து இருக்கிறார். இந்த அரசியல் 'சென்டிமெண்ட்' மக்களிடம்எந்த அளவுக்கு எடுபடும்? என்பது போக போகத்தான் தெரியும். அன்று.. அம்மா, இன்று.. அப்பா யார் முந்தப்போகிறார்கள்? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.