தீப்பெட்டி உற்பத்தியின் தலைநகரம்.. கோவில்பட்டி தீப்பெட்டிக்கு 100 வயது.!

தீப்பெட்டி உற்பத்தி தொழிலை காக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.;

Update:2025-09-20 17:11 IST

கோவில்பட்டி,

கோவில்பட்டி தீப்பெட்டி

தீப்பெட்டி.. ஆதி காலத்து சிக்கி முக்கி கல்லுக்கும், நவீன காலத்து கியாஸ் லைட்டருக்கும் இடைப்பட்ட தீ பற்றவைக்கும் சாதனம். இந்திய அளவில் தீப்பெட்டி உற்பத்தி தொழிலில் தமிழகம் முக்கிய இடம் வகிக்கிறது. 70 சதவீதத்துக்கும் அதிகமான தீப்பெட்டிகள் தமிழ்நாட்டில் இருந்துதான் உற்பத்தியாகின்றன.

தமிழ்நாட்டிலும் கோவில்பட்டி தீப்பெட்டி உற்பத்தியில் முக்கிய இடம் வகிக்கிறது. இன்றைக்கும் பல இடங்களில் குடிசைத் தொழிலாகவே தீப்பெட்டி தொழில் நடைபெறுகிறது. நவீன வரவான கியாஸ் லைட்டர்களால் தற்போது தீப்பெட்டி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், கியாஸ் லைட்டர்கள் இறக்குமதிக்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. என்றாலும், லைட்டர்கள் தயாரிப்புக்கான பொருட்களை தனித்தனியாக கொண்டுவந்து, அதை பொருத்தி லைட்டராக்கி கியாஸ் அடைத்து விற்பனை செய்து வருகின்றனர். தற்போது அதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இருள் நோக்கி செல்லும் தீப்பெட்டி தொழில்

இப்படி தீப்பெட்டி உற்பத்தி தொழிலை காக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால், நல்ல ஒளியை கொடுக்கும் தீப்பெட்டி உற்பத்தி தொழில் இன்றைக்கு இருளை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. என்றாலும், தீப்பெட்டி தொழிலின் வரலாறு நூற்றாண்டை கடந்தது. கோவில்பட்டியில் தீப்பெட்டி உற்பத்தி தொழில் 20-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் குடிசைத் தொழிலாக தொடங்கப்பட்டது. வெப்பமான பகுதி என்பதால், தீப்பெட்டியை ஒட்டி உலர வைப்பதற்கு ஏற்ற இடமாக கோவில்பட்டி இருந்தது. சாலை மற்றும் ரெயில் போக்குவரத்துக்கும் ஏற்ற இடமாக இருந்ததால் தீப்பெட்டி ஏற்றுமதிக்கும் எளிதாக இருந்தது. இன்றைக்கும் தீப்பெட்டி தொழிலை அங்குள்ள தொழிலாளர்கள் பலர் தலைமுறை தலைமுறையாக செய்து வருபவர்களே.

நூற்றாண்டை கடந்த வரலாறு

கோவில்பட்டியில் உள்ள தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் இன்னும் பாதி அளவே தானியங்கி முறையில் தீப்பெட்டியை செய்கின்றனர். மீதிப் பணியை தொழிலாளர்களே செய்து முடிக்கின்றனர். இந்தியாவில் தீப்பெட்டி உற்பத்தியின் தலைநகரம் கோவில்பட்டி என்று சொல்லும் அளவுக்கு தகுதி வாய்ந்ததாக விளங்கி வருகிறது. அத்தகைய சிறப்பு கொண்ட கோவில்பட்டி தீப்பெட்டிக்கு தற்போது 100 வயது என்பது தமிழர்கள் அனைவரும் பெருமையே.  

Tags:    

மேலும் செய்திகள்