சென்னை புத்தகக் கண்காட்சியில் சென்சஸ் மையம் - பொதுமக்கள் பார்வையிட அழைப்பு

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் குறித்து ஆழமான புரிதலை பெற பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.;

Update:2026-01-09 23:37 IST

சென்னை,

தமிழ்நாடு மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குநரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

“சென்சஸ் மையம், YMCA மைதானம், நந்தனம், சென்னையில் நடைபெற்று வரும் 49-வது சென்னை புத்தகக் கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ளது. இதனை 9 ஜனவரி 2026 அன்று, தமிழ்நாடு மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குநர் சுந்தரேஷ் பாபு, ஐ.ஏ.எஸ். திறந்து வைத்தார்.

சென்சஸ் மையம் அமைக்கப்பட்டுள்ள நோக்கம், 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல், அதன் முக்கியத்துவம், நடைமுறை மற்றும் புதுமைகள் குறித்து தகவல் வழங்குதல் ஆகும். சென்சஸ் 2027-ல், திட்டமிடப்பட்டுள்ள டிஜிட்டல் வடிவமைப்பு மற்றும் பொதுமக்கள் பங்கேற்பு முயற்சிகள் பற்றிய விளக்கங்களும் இடம்பெறும்.

இந்த முயற்சி, நாட்டின் மிகப்பெரிய நிர்வாக மற்றும் புள்ளிவிவரச் செயல்பாடான மக்கள் தொகை கணக்கெடுப்பின் முக்கியத்துவத்தை பொதுமக்கள் ஆழமாகப் புரிந்து கொள்ள உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

சென்சஸ் மையத்தில், மக்கள் பங்கேற்பின் அவசியம் வலியுறுத்தப்பட்டு, 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பை வெற்றிகரமாக நடத்த பொதுமக்கள் எவ்வாறு கற்றுக்கொண்டு, ஈடுபட்டு, பங்களிக்க முடியும் என்பதையும் விளக்குகிறது.

கணக்கெடுப்பு மையத்திற்கு வருவதன் மூலம் பார்வையாளர்கள் பெறும் பயன்கள்:

* மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைமுறை மற்றும் திட்டமிடல், கொள்கை வடிவமைப்பில் அதன் பயன்களை அறிதல்.

* 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கான புதிய டிஜிட்டல் கருவிகள் மற்றும் நடைமுறைகளைப் பற்றி அறிதல்.

* மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரிகளுடன் கலந்துரையாடுதல்.

* தகவல் பிரசுரங்கள் மற்றும் Display-களைப் பார்வையிடுதல்.

* இந்திய தலைமைப் பதிவாளர் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் அலுவலகத்தின் நூல்கள் மற்றும் வெளியீடுகளைப் பார்வையிடுதல்.

* பல்வேறு நிர்வாக நிலைகளில் மைக்ரோ மற்றும் மேக்ரோ மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவுகளை ஆராய்தல்.

* வினாடி வினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றல்.

கல்வி சார்ந்த தகவல்களை ஆராய்ந்து, மக்கள் தொகை கணக்கெடுப்பு செயல்பாடுகள் மற்றும், இந்த பணியில் நாட்டின் குடிமக்களாக அவர்களின் பங்கு குறித்து ஆழமான புரிதலை பெறுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

மாணவர்கள், ஆய்வாளர்கள் மற்றும் பொதுமக்கள் புத்தகக் கண்காட்சி நடைபெறும் காலம் முழுவதும் புத்தகக் கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள சென்சஸ் மையத்தைப் பார்வையிட தமிழ்நாடு மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குநரகம் அன்புடன் அழைக்கிறது.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்