முத்துமாலைபுரம் கிராமத்தில் வெளிநாட்டினர் பங்கேற்ற பொங்கல் விழா: மாட்டுவண்டியில் ஊர்வலம்

தென்காசி மாவட்டம் முத்துமாலைபுரம் கிராமத்தில் வெளிநாட்டினர் பங்கேற்ற பொங்கல் விழா சிறப்பாக நடந்தது.;

Update:2026-01-09 21:23 IST

தென்காசி மாவட்டம் முத்துமாலைபுரம் தோரணமலை பரம்பரை அறங்காவலர் ஆ.செண்பகராமனின் சொந்த கிராமமம் ஆகும். அவர் தன்னுடைய முன்னோர்கள் வசித்த பூர்வீக வீட்டை தன் பெற்றோர் பெயரில் மாலைநேர படிப்பகமாக மாற்றியுள்ளார். அந்த ஆதிநாராயணன்-சந்திரலீலா மாலை நேர கட்டணமில்லா படிப்பகத்தில் 102 மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். அவர்களுக்கு நோட்டு புத்தகம், கல்வி உபகரணங்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. மேலும் தனக்கு சொந்தமான இடத்தில் விளையாட்டு மைதானம் அமைத்து கொடுத்துள்ளார்.

அந்த விளையாட்டு மைதானத்தில் இன்று (9.1.2026) மாலை வெளிநாட்டினர் பங்கேற்ற பொங்கல் விழா நடத்தப்பட்டது. மைதானம் வண்ண காகிதங்களால் அலங்கரிக்கப்பட்டது. இதில் ஸ்பெயின், நெதர்லாந்து, கடனா நாட்டைச் சேர்ந்த 5 பேர் பங்கேற்றனர். அவர்கள் முன்னிலையில் கரும்பு, மஞ்சள் வைத்து மூன்று பானையில் பொங்கல் வைக்கப்பட்டது. பொங்கல் பொங்கி வரும்போது 'பொங்கலோ பொங்கல்' என்று முழக்கமிட்டனர். பின்னர் வழிபாடு நடத்தப்பட்டது. மேலும் மாடுகளுக்கும் பூஜை நடத்தப்பட்டது.

இதையடுத்து மாணவ-மாணவிகள், "விவசாயத்தை பேணுவோம் விவசாயியை போற்றுவோம்; பசுவையும், காளைகளையும் பேணி காப்போம்; காலை கதிரவன் உதிக்கும்போது கண்டு வணங்குவோம்; தமிழர் கலாசாரத்தை என்றென்றும் மறவோம்; கிராம பண்பாட்டை வளர்ப்போம், உறவுகளை மதித்து பேணி காப்போம்" என்று உறுதிமொழி எடுத்தனர்.

மேலும் கனடா நாட்டைச் சேர்ந்த முருகபக்தர் கேதர்நாதன் சுப்பிரமணியன் திருக்குறள் ஒப்புவித்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு படிப்பகத்திற்கு வந்து மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் பங்கேற்ற மாணவ-மாணவியருக்கு வெளிநாட்டினர் பரிசு வழங்கினர். இதையடுத்து வெளிநாட்டினரை மாட்டுவண்டியில் அமரவைத்து கிராமத்தை வலம் வந்தனர். விழாவில் அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை தோரணமலை முருகன் கோவில் பரம்பரை அறங்காவலர் ஆ.செண்பகராமன் செய்திருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்