தோட்டா தரணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

தோட்டா தரணிக்கு "செவாலியர்" விருது அறிவிக்கப்பட்டுள்ளது.;

Update:2025-11-12 08:03 IST

சென்னை,

இந்திய அளவில் தடம் படித்த தமிழ் சினிமாவின் ஆஸ்தான கலை இயக்குனர் தோட்டா தரணி 64 ஆண்டுகளாக திரைத்துறைக்கு தனது பங்களிப்பை அளித்து வருகிறார். இந்நிலையில் தோட்டா தரணியின் கலைத் துறைப் பங்களிப்பைப் பாராட்டி, அவருக்குப் பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான "செவாலியர்" விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

கலை, இலக்கியம் மற்றும் அறிவியலில் சிறந்து விளங்குபவர்களைக் கவுரவிக்கும் விதமாக பிரான்ஸ் அரசு, 1957-ம் ஆண்டு முதல் செவாலியர் விருதை வழங்கி வருகிறது. முன்னதாக தமிழ் சினிமாவில் மறைந்த பழம்பெரும் நடிகர் சிவாஜி கணேசன் (1995), கமல்ஹாசன் (2016) உள்ளிட்டோர் இந்த விருதைப் பெற்றுள்ளனர். தற்போது, அந்தப் பட்டியலில் தோட்டா தரணியும் இணைந்துள்ளார்.

நாளை (13-ம் தேதி) சென்னையில் உள்ள அலையன்ஸ் பிரான்சைஸ் வளாகத்தில் நடைபெறும் விழாவில் தோட்டா தரணிக்கு செவாலியர் விருது வழங்கப்படவுள்ளது. இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் இந்த விருதை அவருக்கு வழங்க இருக்கிறார்.

இந்த நிலையில், தோட்டா தரணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில்,

“ஆக்ஸ்போர்டில் ஒளிரும் தந்தை பெரியாரின் ஓவியத்தைத் தந்து நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்திய தோட்டா தரணிக்கு, பிரான்சு அரசின் உயரிய அங்கீகாரமான செவாலியர் விருது அறிவிக்கப்பட்டிருப்பது நம் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியுள்ளது. அரசு கவின் கலைக் கல்லூரியில் பயின்ற தோட்டா தரணி, இந்தியாவில் இருந்து இவ்விருது பெற்ற மிகப்பெரும் ஆளுமைகளின் வரிசையில் இணையவுள்ளது பெருமையளிக்கிறது. பார் போற்றும் உங்கள் சாதனைக்குப் பாராட்டுகள்” என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்