வெனிசுலா மீது அமெரிக்கா தாக்குதல் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

கிருஷ்ணகிரியில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.;

Update:2026-01-03 20:37 IST

சென்னை,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

“வெனிசூலாவில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிக்கோலஸ் மதுரோ ஜனாதிபதியாக இருந்தார். அவருக்கு முன்பு அந்நாட்டின் ஜனாதிபதியாக இருந்த ஹியூகோ சாவேஸ் கடைபிடித்த இடதுசாரி கொள்கைகளை மதுரோ கடைபிடித்து வந்தார். இதனால் மக்கள் மத்தியில் செல்வாக்கு மிக்கத் தலைவராக திகழ்ந்தார்.

வெனிசூலா எண்ணெய் வளம் மிக்க நாடாகும். அந்நாட்டின் எண்ணெய் நிறுவனங்கள் நாட்டுடமையாக்கப்பட்டுள்ளன. இதனால் அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள் அந்நாட்டைவிட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்நிலையில் வெனிசூலாவின் எண்ணெய் வளத்தை மீண்டும் கைப்பற்றும் நோக்குடன், அந்நாட்டின் இயற்கை வளங்களை கொள்ளையடிக்கும் நோக்குடன் அமெரிக்கா சதித்திட்டங்களை தீட்டி செயல்பட்டு வந்தது.

அந்நாட்டின் மீது ராணுவ ரீதியான தாக்குதலை தொடுக்க திட்டமிட்டது. வெனிசூலாவை சுற்றி, அதன் எல்லை அருகில், கரீபியன் கடலில் தனது விமானந்தாங்கி கப்பல்கள் உட்பட ஏராளமான போர்க் கப்பல்களை நிறுத்தியது. வெனிசூலா மீது விமானங்கள் பறக்க அமெரிக்கா தடைவிதித்தது.

இந்நிலையில் அந்நாட்டின் தலைநகர் மீது கடும் தாக்குதலை இன்று காலை நடத்தியுள்ளது. “வெனிசூலாவின் அதிபர் நிக்கோலஸ் மதுரோவையும், அவரது மனைவியையும் அமெரிக்கா கைது செய்துள்ளது. அவர்களை நாடு கடத்தி அமெரிக்காவிற்கு அழைத்துச் சென்றுள்ளது, அமெரிக்க சட்டப்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.

இது சர்வதேச சட்ட நெறிமுறைகளுக்கு எதிரான குற்றச் செயலாகும். இந்நிலையில் வெனிசூலாவின் துணை ஜனாதிபதி டெல்ஸி ரோட்டிரிக்ஸ், “நிக்கோலஸ் மதுரோவும், அவரது மனைவியும் எங்கிருக்கிறார்கள் எனத் தெரியவில்லை. அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அவர்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

வெனிசூலாவின் சுதந்திரத்திற்கும், ஜனநாயகத்திற்கும், இறையாண்மைக்கும், சுயநிர்ணய உரிமைக்கும் எதிரான அமெரிக்காவின் இத்தகைய ஆக்கிரமிப்பு நடவடிக்கையை, குற்றச் செயலை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில நிர்வாகக் குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

இப்பிரச்சனையில் உடனடியாக ஐக்கிய நாடுகள் சபை தலையிட வேண்டும். வெனிசூலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவையும் அவரது மனைவியையும் பத்திரமாக மீட்க வேண்டும். அவர்களின் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும்.

இதே போன்று, 1990- ஜனவரி 3-ந்தேதி, பனாமாவின் அதிபர் மானுவல் நோரிகா, அமெரிக்கப் படையெடுப்பிற்குப் பிறகு கைது செய்யப்பட்டார். அதே தேதியில் நிக்கோலஸ் மதுரோவும் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் தலையீட்டால், மானுவல் நோரிகா கைது செய்யப்பட்ட பிறகு, பனாவில் ஒரு நிலையான ஜனநாயக ரீதியான அரசு உருவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வெனிசூலாவின் ஜனநாயகம் மீட்கப்பட, இந்தியா உட்பட சர்வதேச நாடுகள் குரல் கொடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில நிர்வாகக் குழு கேட்டுக்கொள்கிறது. அமெரிக்காவின் இந்த அத்துமீறிய, ஆக்கிரமிப்பு நடவடிக்கையை கண்டித்தும், நிக்கோலஸ் மதுரோவையும், அவரது மனைவியையும் விடுவிக்க வேண்டும், வெனிசூலாவில் இருந்தும், கரிபீயன் கடற்பகுதியில் இருந்தும் அமெரிக்கப் படைகள் வெளியேற வேண்டும் என்பதை வலியுறுத்தி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு சார்பில், நாளை, 04.01.2026 காலை 10.00 மணி அளவில் கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில நிர்வாகக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்