பெண் மீன் வியாபாரியை தாக்கி, கடை சூறை: பெண்கள் உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு
தூத்துக்குடியில் மீன் கடை நடத்தி வரும் ஒரு பெண்ணிடம், அந்த கடையை அகற்ற வலியுறுத்தி அருகில் உள்ள வீட்டைச் சேர்ந்த பெண்கள் சண்டை போட்டுள்ளனர்.;
தூத்துக்குடி சக்திநகரை சேர்ந்த பால்ராஜ் மனைவி பார்வதி (வயது 63). இவர் தூத்துக்குடி பெருமாள்புரம் மெயின் ரோட்டில் மீன் கடை நடத்தி வருகிறார். இந்த கடையை அகற்ற வலியுறுத்தி அருகில் உள்ள வீட்டைச் சேர்ந்த பெண்கள் அவரிடம் சண்டை போட்டுள்ளனர். அப்போது வாக்குவாதம் முற்றவே அந்த பெண்களின் உறவினர்கள் சிலர் சேர்ந்து மீன் கடையை அடித்து நொறுக்கி சேதப்படுத்தி உள்ளனர்.
மேலும் மீன் கடை நடத்தி வரும் பார்வதியையும் கொடூரமாக தாக்கினார்களாம். இதில் படுகாயம் அடைந்த பார்வதி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் உட்பட 5 பேர் மீது தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.